காதலிக்கும் மகன்... பிரிக்கும் தந்தை... பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்

சந்தானம், அனைகா நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் விமர்சனம்.
விமர்சனம்
விமர்சனம்
Published on

பாரிஸ் பகுதியில் கானா பாடகராக இருக்கிறார் சந்தானம். இவருடைய முதல் காதல் தோல்வியில் முடிந்துவிட, அடுத்ததாக அனைகாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் இந்தக் காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயராஜின் தந்தை பிருத்விராஜ், பிறகு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார். திவ்யாவின் தந்தையும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஜெயராஜின் காதலை முதலில் ஆதரித்த தந்தை, பிறகு எதிர்ப்பது ஏன்?, தந்தையின் எதிர்ப்புகளை மீறி சந்தானம் அனைகாவை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் கானா பாடகராக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், காதலி பின்னால் சுற்றும் வழக்கமான சந்தானத்தையே பார்க்க முடிகிறது. கிளைமாக்ஸில் இவருடைய உடல் மொழி ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் அனைகா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். சில இடங்களில் இவர் பேசும் வசனம் படத்தோடு ஒட்டாமல் இருக்கிறது.

சந்தானத்திற்கு அப்பாவாக வரும் பிருத்வி ராஜின் நடிப்பு சிறப்பு. சந்தானத்திற்கு நிகராக இவருடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறன், சேது, சேஷு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், கலக்கப்போவது யாரு வினோத், மற்றும் தங்கதுரை ஆகியோர் டைமிங் காமெடியில் பேசி அசத்தி இருக்கிறார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் நமக்கு பேட் டைமிங்காகவும் மாறுகிறது. 

சந்தானம் நடித்து ஜான்சன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிந்த ஏ 1 படம் வெற்றி பெற்றதையடுத்து, அதே குழு மீண்டும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முதற்பாதியில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் கூடுதலாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். டைமிங் காமெடியை ஒரு சில இடங்களில் தவிர்த்திருக்கலாம். அதுபோல் அனைத்து கதாபாத்திரமும் டைமிங் காமெடியில் பேசுவது நெருடலாக இருக்கிறது. 

சந்தானம் கானா பாடகர் என்பதால் எல்லாப் பாடல்களுமே அதே பாணியில் இடம்பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசையில் முதல் மூன்று பாடல்களும் தேவையில்லாத இடங்களில் வந்ததுபோல் இருக்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com