நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்

நமீதா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அகம்பாவம்’ படத்தின் இயக்குனர் வெளியேற்றப்பட்டுள்ளார். #Namitha #Agambavam
நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்
Published on

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது. பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை படமாக உருவாக்கி வருகிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாக நடித்து தயாரித்தும் வருகிறார் வாராகி. ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தில் இருந்து ஸ்ரீமகேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார். 

இதுகுறித்து தயாரிப்பாளர் வாராகி கூறும்போது, ‘இயக்குனர் ஸ்ரீமகேஷ், பட வாய்ப்பு இல்லாமல் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். அவருடைய வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த, இப்படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தேன். குடிக்காமல் படப்பிடிப்பை முடித்து தரும்படி கேட்டுக் கொண்டு ஒப்பந்தம் செய்தேன். ஆனால், அவர் ஒப்பந்தத்தை மீறி தினமும் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதனால், இந்த படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டேன். நானே இப்படத்தை இயக்கவும் முடிவு செய்துவிட்டேன்’ என்றார்.

தயாரிப்பாளர் வாராகி இதற்கு முன், ‘சிவா மனசில புஷ்பா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அகம்பாவம்’ படத்தில் மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சின்னு சதீஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்தியன் பாஸ்கர் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com