நடிகர் திலீப்பின் புதிய படம் வெளியாவதை தடுக்க கூடாது: மஞ்சுவாரியர் வேண்டுகோள்

நடிகர் திலீப்பின் புதிய படம் வெளியானால் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று மிரட்டல் வந்துள்ளதை அடுத்து, படம் வெளியாவதை யாரும் தடுக்கக் கூடாது என்று நடிகை மஞ்சுவாரியர் `பேஸ்புக்'கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் திலீப்பின் புதிய படம் வெளியாவதை தடுக்க கூடாது: மஞ்சுவாரியர் வேண்டுகோள்
Published on

நடிகர் திலீப் மலையாள பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பதால் அவர் ஒரே நேரத்தில் பல மலையாள படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அதில் ராம் லீலா என்ற படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் தான் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

இதனால் அந்த படத்தை ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளருக்கு பிரச்சினை ஏற்பட்டதால் அந்த படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டது. இது போல மேலும் சில படங்களின் படப்பிடிப்புகளும் பாதியிலேயே நின்று போனது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக ஓணம் பண்டிகையின் போது திலீப்பின் புதிய சினிமா படம் கண்டிப்பாக வெளியாகும். இந்த ஆண்டு அவரது படம் எதுவும் ஓணத்தின் போது வெளியாக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆனதால் அவர் நடித்த ராம்லீலா படத்தை திரைக்கு கொண்டு வர அதன் தயாரிப்பாளர் டோமிச்சன் முளகுபாடம் திட்டமிட்டுள்ளார். வருகிற 28-ந்தேதி இந்த படத்தை வெளியிடவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.

ஆனால் ராம்லீலா படத்தை வெளியிடுவதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த படம் வெளியாகும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று தயாரிப்பாளருக்கு மிரட்டள்களும் சென்றன. இதனால் அந்த படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு கோர்ட்டில் தயாரிப்பாளர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

திலீப்பின் படம் வெளியாவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த படம் வெளியாவதற்கு திலீப்பின் முன்னாள் மனைவியும் பிரபல நடிகையுமான மஞ்சுவாரியர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

திலீப்பின் ராம்லீலா படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பி உள்ளது துரதிருஷ்டவசமானது. திலீப் மீது உள்ள தனிப்பட்ட எதிர்ப்பை சினிமா மீது காட்டக்கூடாது. சினிமா என்பது பலரின் உழைப்பில் உருவாவது. அது தனி ஒருவருக்கு சொந்தமானது அல்ல. எனவே அந்த படம் வெளிவந்து அனைவரும் பார்க்க வேண்டும். அதன் மூலம் தனக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் நினைப்பார்.

எனவே அந்த படத்தை வெளியிடக்கூடாது என்று கூறுவது சினிமாவுக்கு செய்யும் அநீதியாகும். ரசிகர்கள் ராம்லீலாவை பார்க்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com