

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் படம் `கலாசல்'. நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாகவும், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பாபுகுமார், இசை - நிஜாமுதீன், கலை - கல்லை தேவா, படத்தொகுப்பு - கோபிகிருஷ்ணா, சண்டைப்பயிற்சி - டேஞ்சர் மணி, நடனம் - கல்யாண், கிரிஷ், தயாரிப்பு நிர்வாகம் - அருள், தயாரிப்பு - பி.சி.பாலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அஸ்வின் மாதவன்.
பழனியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற்று வருகிறது.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது..
சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், மனிதனின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிகிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்தி விட்டு, வேண்டியதை கேட்டு பெறுவது பண்டம்மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம் தான்.
நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை என்றார். #Kalasal