

மிக பிரமாண்டமாக தயாராகி உலகம் முழுவதும் திரைக்கு வந்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்.’
இதில் ராபர்ட்டானி, கிறிஸ்கெம்ஸ் வொர்த், பார்க்ரூபலா, கிறிஸ்வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஆன்டனி ரஸோ, ஜோரஸோ ஆகியோர் இந்த படத்தை இயக்கி உள்ளனர்.
உலக அளவில் எதிர் பார்க்கப்பட்ட இந்த படம் 3டி, நவீன தொழில்நுட்பத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட படம். ஒரு வில்லனுடன் 22 சூப்பர் ஹீரோக்கள் மோதுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான பல ஹாலிவுட் படங்களின் தொடர்ச்சியாக இது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ‘திகில்’ நிறைந்த மிரட்டலான அதிரடி காட்சிகள் உள்ளன.
‘3டி’யில் இந்த படத்தை பார்த்தால் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருக்கும். துப்பாக்கியில் இருந்து வெளியேறும் குண்டுகள் படத்தை பார்ப்பவர் மீது பாய்வது போன்ற பிரமை ஏற்படும். காட்சி மற்றும் இசை அமைப்பிலும் நவீன தொழில் நுட்பங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’ படம் 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஹாலிவுட் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆந்திராவில் உள்ள ஒரு திரை அரங்கில் இந்த படத்தை பார்ப்பதற்கு பாட்சா என்ற ரசிகர் நண்பர்களுடன் சென்றார். 3டியில் திரையிடப்பட்ட ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அதிரடி சண்டை காட்சியை ரசித்துக் கொண்டிருந்த அவருக்கு அதிர்ச்சியில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பலனின்றி பாட்சா பரிதாபமாக உயிர் இழந்தார். திரைப்படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.