பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் என்னை பாராட்டினார் - விஷ்ணு விஷால்!

சென்னையில், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 'கட்டா குஸ்தி 2', VV25 படம் என அடுத்தடுத்த படங்களின் மாஸ் அப்டேட் ரிலீஸ் வரிசையை வெளியிட்டார் விஷ்ணு விஷால்.
VishnuVishal
Published on

நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் வரிசை மற்றும் தனது திரைப்பயணத்தின் மைல்கல் திரைப்படமான 25-வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகளைச் சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது அடுத்த ரிலீஸாக 'இரண்டு வானம்' திரைப்படம் அமையவுள்ளது.

இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ஏற்கனவே நல்ல விலைக்கு விற்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு புதிய ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் அவரது திரைப்பயணத்தின் மிக முக்கியமான 25-வது திரைப்படமாக அமையவுள்ளது.

இதற்கான ஒரு சிறந்த கதை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டா குஸ்தி முதல் பாகத்திற்காக 5 நாட்கள் மட்டுமே மல்லுயுத்தப் பயிற்சி பெற்ற விஷ்ணு விஷால், இந்த இரண்டாம் பாகத்திற்காக 20 நாட்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு நடித்துள்ளார்.

முதல் பாகம் பெண்களைப் பற்றியதாக இருந்த நிலையில், இரண்டாம் பாகம் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' எனப்படும் வீட்டு வேலைகளைப் பார்க்கும் கணவன்மார்களின் வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சமூகப் பார்வைகளைப் பேசும் பக்கா காமெடி மற்றும் எமோஷனல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கணவன் - மனைவிக்குள் இருக்கும் குடும்பப் பிரச்சினைகளை மையமாக வைத்து 'கட்டா குஸ்தி 3' எடுப்பதற்கான ஐடியாவும் இப்போதே தயார் நிலையில் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் படம் குறித்த விளக்கம்..

'பேச்சுலர்' பட இயக்குநர் சதீஷ் செல்வகுமாருடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 'ஒரு மாம்பழ சீசனில்' என்ற திரைப்படம் தற்போதைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அதே இயக்குநரின் மற்றொரு புதிய அற்புதம் வாய்ந்த கதையில் தான் நடிக்க உள்ளதாகவும் தெறிவித்தார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் பாராட்டு..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், 'ராட்சசன்' மற்றும் 'FIR' ஆகிய படங்களைப் பார்த்துவிட்டு பெரிதும் பாராட்டினார். எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவது குறித்தும் விவாதித்துள்ளதாக விஷ்ணு விஷால் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com