

இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மக்கள் தலைவா' திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மக்கள் தலைவா ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கே. பாக்யராஜ், "எந்த பூவின் வாசமும் காற்று எந்த திசையில் வீசுகிறதோ, அந்த திசையில் தான் பயணிக்கும். ஆனால் ஒரு பூவின் வாசம் மட்டும் காற்றுக்கு எதிர் திசையில் கூட வாசம் வீசும். அது என்னவென்றால் ஒரு மனிதரின் நற்பண்பு. இது ரவி மரியாவிற்கு பொருந்தும். இங்கு பேசிய அனைவரும் ரவி மரியாவின் உதவும் குணத்தையும் , பெருந்தன்மையையும் குறிப்பிட்டனர். இதை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது.
இந்தப் படத்தில் அவர் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை அவரே முன்நின்று ஒருங்கிணைத்து வருகிறார். நான் இங்கு வந்த பிறகு தான் இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத் - பழ கருப்பையா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். இவர்களுடைய தமிழை கேட்க மிகவும் விரும்புவேன். எல்லோராலும் இலக்கண சுத்தமாக தமிழில் பேச முடியாது. அதில் அவர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள்.
இங்கு சென்சார் பிரச்சனையை பற்றி பேசினார்கள். என்னுடைய படங்கள் என்றால் சென்சாரில் நான்கு பெண்கள் ஒரு ஆண் இருப்பார்கள். 'மௌன கீதங்கள்' படத்தில் ஒரு காட்சி இடம் பிடித்திருக்கும். இந்த காட்சியை சென்சார் குழுவில் இருந்த பெண்கள் பிடித்துக் கொண்டனர். இது எப்படி? இது ரெட்டை அர்த்தத்தை குறிப்பிடுகிறது. எப்படி அனுமதிப்பது? என கேள்வி எழுப்பினர். இதில் என்ன இரட்டை அர்த்தம். எனக்கு எதுவும் புரியவில்லை என்று சொன்னேன். அப்போது அவர்களிடம் கணவன் - மனைவி இடையே தானே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தேன்.
இதனால் சில காட்சிகள் இயல்பாக இருந்தால் அதனை போராடி இடம்பெறச் செய்யலாம். இந்த படத்தில் இயக்குநர் ராம்தேவ் அரசியலை சொல்லி இருக்கிறார். என்னுடைய அரசியல் எல்லாம் குடும்பங்களில் தான் இருக்கும். அதற்காக நான் என்னுடைய படங்களை இயக்கும்போது சென்சார் பற்றி கவலைப்பட்டதில்லை," என்றார்.