

லெக்சஸ் இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை லெக்சஸ் ES 500e மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லெக்சஸ் ES 500e விலை ரூ. 89.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என தொடங்குகிறது. இந்திய சந்தையில் லெக்சஸ் நிறுவனத்தின் முதல் ஆல்-எலெக்ட்ரிக் மாடலாக புதிய ES 500e அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதே காரின் ஹைப்ரிட் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய ES மாடல் எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் என இருவித பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும். புதிய ES 500e எலெக்ட்ரிக் வேரியண்ட் 74.69 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்படுகிறது. இது 338 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.5 நொடிகளில் எட்டிவிடும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செயதால் இந்த கார் 580 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.
டிசைனை பொருத்தவரை புதிய ES மாடல் லெக்சஸ் நிறுவனத்தின் மேம்பட்ட ஸ்டைலிங் மற்றும் இரட்டை L வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகிறது. இந்த காரின் முதன்மை ஹெட்லாம்ப்கள் பம்ப்பரின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 21 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. பின்புறத்தில் மெல்லிய கனெக்ட்டெட் எல்.இ.டி. லைட் பார் உள்ளது. இத்துடன் இலுமினேட் செய்யப்பட்ட லெக்சஸ் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
கேபினுள் இந்த கார் 12.3 இன்ச் ஹூட்லெஸ் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 14 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயியன்மென்ட் சிஸ்டமுடன் வருகிறது. இத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த கார் லெவல் 2 ADAS, எலெக்ட்ரிக் சன்ரூஃப், 17 ஸ்பீக்கர் மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் IRVM, டூயல் வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள் வழங்கப்பட்டுள்ளன.