

கார் சந்தையில் முன்னணியில் உள்ள மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பாதகமான விலை சூழலை காரணம் காட்டி, ஜூன் 2026 முதல் தனது அனைத்து மாடல் வாகனங்களின் விலைகளையும் ரூ.30,000 வரை உயர்த்த போவதாக அறிவித்தது.
ஜூன் 2026 முதல் தனது அனைத்து மாடல்களின் விலைகளையும் ரூ.30,000 வரை உயர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மாருதி சுசுகி இந்தியா ஒரு ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாற்றத்தின் சரியான அளவு ஒவ்வொரு மாடலுக்கும் மாறுபடும் என்று அது மேலும் கூறியது.
"கடந்த சில மாதங்களாக, செலவு குறைப்பு நடவடிக்கைகள் மூலம் செலவு தாக்கத்தை முடிந்தவரை தணிப்பதற்கு நிறுவனம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பணவீக்க அழுத்தங்கள் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாலும், பாதகமான செலவு சூழல் நீடிப்பதாலும், நிறுவனம் அதிகரித்த செலவுகளின் ஒரு பகுதியை சந்தைக்கு கடத்த வேண்டியுள்ளது.
அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் மீதான தாக்கம் முடிந்தவரை குறைந்தபட்ச அளவில் வைக்கப்படுவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்," என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
மாருதி சுசுகி இந்தியா தற்போது ஆரம்ப நிலை எஸ்-பிரஸ்ஸோ முதல் பிரீமியம் பயன்பாட்டு வாகனமான இன்விக்டோ வரையிலான பல்வேறு வாகனங்களை ரூ. 3.49 லட்சம் முதல் ரூ. 28.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் விற்பனை செய்கிறது.
சமீபத்தில், அதிகரித்து வரும் செலவுகள், குறிப்பாக மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிறுவன அதிகாரிகள் சூசகமாக தெரிவித்திருந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்த பிறகு, அந்நிறுவனம் தனது ஆரம்ப நிலை மாடலான எஸ் பிரஸ்ஸோவின் விலையை ரூ. 1,29,600 வரையிலும்; ஆல்டோ கே10-ன் விலையை ரூ. 1,07,600 வரையிலும்; செலிரியோவின் விலையை ரூ. 94,100 வரையிலும்; மற்றும் வேகன்-ஆரின் விலையை ரூ. 79,600 வரையிலும் குறைத்தது.