

முக்கிய தேவைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். ஆன்ம பலம் அதிகரிக்கும். நினைத்ததை நினைத்தபடியே செய்யக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். குடும்ப சுமைகள், பொறுப்புகள் குறையும். தேவைக்கு பணம் கிடைக்கும்.பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். வேலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும். திருமண முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலர் கடன் பெற்று புதிய சொத்துக்கள் வாங்கலாம். மாணவர்களுக்கு மறைந்து கிடந்த அனைத்து திறமைகளையும் வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும்.சிலருக்கு பெண்களால் தேவையற்ற மன உளைச்சல் உருவாகும். பிள்ளைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்லலாம். ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடவும்.
அதிர்ஷ்டகரமான வாரம். ராசியில் சுக ஸ்தான அதிபதி சூரியனும் 2,5ம் அதிபதி புதனும் இணைந்து புத ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. கோட்ச்சார கிரகங்களின் சஞ்சாரம் ரிஷப ராசிக்கு மிக சாதகமாக உள்ளது.
குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். பேச்சில் தெளிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். சிலருக்கு அதிர்ஷ்ட பணம் அல்லது பொருள் கிடைக்கும். பணப்பற்றாக்குறை அகலும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு மறு திருமணம் நடக்கும்.
வெகு காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு வைத்தியத்தில் இரட்டைக் குழந்தை பிறக்கும். சிலர் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க முழு உடல் பரிசோதனை செய்யலாம். புது தங்கம், வெள்ளி வாங்கி அணியும் யோகம் உள்ளது. படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்தில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். வயது முதிர்ந்த பெண்களுக்கு ஆடை, இனிப்பான உணவு தானம் தரவும்.
வெற்றி மேல் வெற்றி உண்டாகும் வாரம். ஜென்ம குருவாக பலன் கொடுத்துக் கொண்டிருந்த குரு பகவான் சில நாட்களில் தன குருவாக பலன் கொடுக்கப் போகிறார். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றி பெறுவீர்கள். பொருளாதார சுணக்கம் ஏற்படாது. இல்லை என்ற நிலை இருக்காது. குடும்பத் தேவைகள் நிறைவேறும். வீடு கட்டும் யோகம் மனை, தங்கம் வாங்கும் யோகம் உள்ளது. பூர்வீகம், சொத்து தொடர்பான விவகாரங்கள் தடை தாமதமானாலும் நினைத்தபடி சாதகமாக நிறைவேறும்.
குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ்ந்த நிலை மாறும். சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. சுப செலவுகள் உண்டாகும். வீட்டை புதிப்பது, புதிய மனை, வீடு, தங்க ஆபரணம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் உண்டாகும். திருமண முயற்சி நிறைவேறும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். வயதானவர்களின் தேவை அறிந்து உதவவும்.
தடைபட்ட அனைத்து செயல்களும் சித்தியாகும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது புத ஆதித்ய யோகா அமைப்பாகும்.
உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. தொட்டது துலங்கும். அரசாங்க வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.
ராசிக்கு எட்டாமிடத்தில் ராகு நிற்பதால் திருமணம் முயற்சியில் கவனம் தேவை. சிலர் வேலை இழப்பால் பூர்வீகம் திரும்பலாம். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய ஆபரணங்கள் வாங்குவதால் சுப விரயங்கள் அதிகமாகும். திங்கட்கிழமை அந்தணர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தானம் வழங்கவும்.