

விருச்சக ராசியினரே இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் நின்று பலன் கொடுத்த குரு பகவான் 2.6.2026 முதல் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற போகிறார். விருச்சக ராசிக்கு 2,5ம் அதிபதியான குரு பகவான் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான ஒரு பலனாகும்.
பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் ஐந்தாம் பார்வை ராசியிலும் சம சப்தம பார்வை மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்திலும் ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதியும்.சமுதாய அந்தஸ்து , புகழ், கௌரவம் என வாழ்வியல் மாற்றம் ஏற்படப்போகிறது. சகலவிதமான காரிய சித்திகளும் உண்டாகும்.
வெற்றி மேல் வெற்றி வந்து உங்களை சாரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் குரு பகவானை சாரும்.இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார்.இதனால் விருச்சிக ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.
பாக்கிய ஸ்தான குருவின் பொதுவான பலன்கள்
ஒரு ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற கிரகம் நிற்பது ஜாதகருக்கு மிகச்சிறந்த அதிர்ஷ்டகரமான அமைப்பாகும். விருச்சிக ராசிக்கு 2,5ம் அதிபதியான குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்று நிற்பது பல்வேறு விதமான பாக்கிய பலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகும்.
ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்பதால் சுய ஜாதகத்தில் பலவீனமான தசை, புத்தி நடந்தால் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலம் நோக்கிச் செல்வார்கள்.ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கப் போகிறது.இந்த ஜென்மத்தில் லெளகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுக்கு வழங்க உள்ளார். அஷ்டம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் அவமானம் விலகும்.
பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள்,வாழ்க்கைத் துணை , மனைவி மக்கள் முன்னோர்களுக்கு பட்ட பிறவி கடன் பொருள் கடனை தீர்க்க இது உகந்த காலமாகும்.புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு புதுமை படைப்பீர்கள். உங்கள் மனதிலும் உள்ளத்திலும் நேர்மறை சக்தி குடிபுகும். தெய்வீக ஆற்றல் நிரம்பப் பெற்று உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.இதுவரை குலதெய்வம் தெரியாதவர்கள் குலதெய்வத்தை கண்டுபிடிக்க இது உகந்த காலமாக இருக்கும். பூர்வீகம் சொத்து தொடர்பான அனைத்து செயல்களிலும் இருந்த தடை தாமதங்கள் அகலும்.
ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை ராசியில் பதிகிறது. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குரு பாக்கிய ஸ்தானம் செல்வதால் அபரிமிதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள்.உடலும் உள்ளமும் குளிரும் வகையான நல்ல சம்பவங்கள் நடக்கும். மனரீதியான உடல் ரீதியான பிரச்சனைகள் சீராகும். நேர்மறை எண்ணம் பெருகும். பொறுமையும் புத்திக்கூர்மையும், சகிப்புத்தன்மை மேம்படும். உற்றார் உறவுகளின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
நல்ல வாழ்வியல் முன்னேற்றம் கிடைக்கும். உங்களைப் பற்றிய அவதூறு வார்த்தைகள் பேசியவர்கள் உண்மையை உணர்ந்து வருந்துவார்கள். சம்பந்தமில்லாமல் உங்கள் மேல் பதிந்த நீதி மன்ற வழக்குகளில் திருப்புமுனையான தீர்ப்புகள் உங்களை மகிழ்விக்கும்.ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், முயற்சி ஸ்தானம் பலம் பெறுவதால் அசுப பலன்கள் மட்டுப்படும்.
வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கும் அற்புதமான காலமாக இது அமையும் என்றால் அது மிகையாகாது.வாழ்வில் தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் இந்த ஓராண்டுக்குள் நடந்து முடியும்.
ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் ஏழாம் பார்வை மூன்றாமிடமான சகாய ஸ்தானத்தில் பதிகிறது.வாழ்க்கையின் சூழ்நிலை மாற்றத்தை எண்ணி வியப்பீர்கள். அதிர்ஷ்டத்தை நாம் தேடிச் செல்லக்கூடாது, அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வர வேண்டும் என்பதை உணர்வீர்கள். வேலைப் பளுவினால் ஏற்பட்ட அழுத்தம் விலகும்.
குறைவான உழைப்பில் நிறைவான வருமானம் கிடைக்கும்.மிகச் சிரமமான பணிகளைக் கூட மிகச் சாதாரணமாக நிகழ்த்திக் காட்டுவீர்கள். விடா முயற்சியும் தைரியமும் மேலோங்கி அனைத்து பிரச்சனைகளையும் நீங்கள் ஒருவராகவே தனியாக நின்று சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். ஆவணங்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் சீராகும். காணாமல் போன அல்லது கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.
அடமானத்தில் இருந்த அசையாச் சொத்துக்கள் மற்றும் நகைகளை மீட்பதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.உயில் எழுதலாம். உயில்களில் திருத்தம் செய்யலாம். உடன் பிறந்தவர்களின் குடும்ப பிரச்சனைகளை சீராக்குவீர்கள்.
ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் 9ம் பார்வை 5ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறது.சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தோற்றம் பொலிவு பெறும். சாதனை புரியக்கூடிய வகையில் திறமைகள் கூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் வசந்தம் வீசும். மனக்குழப்பத்தோடு இருந்தவர்கள் தெளிவோடு சிந்திப்பீர்கள்.
பிறருக்கு பயன்தரும் ஆலோசனை சொல்லக் கூடிய வகையில் உங்கள் திறமைகள் அதிகரிக்கும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். உங்களின் செயல்பாட்டில் பிறரின் குறுக்கீடுகள் இருக்காது. ஆழ்ந்த சிந்தனையால் பிரபஞ்சத்தின் அதிர்வலைகளால் நாளை நடக்கப் போவதை இன்றே உணரும் பேராற்றல் உருவாகும்.பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் இருந்த தடை தாமதங்கள் மன உளைச்சல் அகலும்.
ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதிகள் வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்கும். திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாகனம் போன்ற சகல விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும்.சிலருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்கும். முறையான பித்ருக்கள் பூஜை செய்து வழிபட பிறவி கடன் மற்றும் பொருள் கடன் தீரும்.
புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்
(2.6.2026 முதல் 18.6.2026 வரை)
விருச்சிக ராசிக்கு 2,5ம் அதிபதியான குருவின் சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து சுப பலன்களும் உங்களை நாடி வரும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.திருமண யோகமுண்டாகும். முதல் திருமணம் தோல்வி அடைந்தவர்களுக்கு இரண்டாம் திருமணமும் நடக்கும்.சிலருக்கு கோட்சார ராகு கேதுவால் திருமணத் தடை ஏற்படலாம். அதனால் ராகு கேது பெயர்ச்சிக்கு முன்பு திருமணத்தை நடத்துவது நல்லது.சிலருக்கு புதியதாக காதல் எண்ணம் மலரும்.ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தும் அன்றைய பாடத்தை அன்றே படிப்பதால் சுமையாக இருக்காது.
பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(19.6.2026 முதல் 19.8.2026) வரை விருச்சிக ராசிக்கு 3, 4ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் புதிய புதிய சிந்தனைகள், யுக்திகள் தோன்றும். தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். உயரிய சிந்தனைகள் வெற்றியைக் கொடுக்கும்.சகோதர சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்புகள் உள்ளது.வாகன வசதிகளை பெருக்கி கொள்வீர்கள். இளம் பருவத்தினருக்கு புத்திர பேறு கிடைக்கும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி பிறப்பார்கள்.மனதை மகிழ்விக்கும் அனைத்து சுபநிகழ்வுகளும் நடக்கும்.
ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)
விருச்சக ராசிக்கு 8,11ம் அதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திர சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம்விடா முயற்சியோடு செயல்பட்டால் வெற்றி தேடி வரும் என்ற அனுப உண்மையை இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு உணர்த்தும். காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியத் தொல்லைகள் சீராகும். அறுவை சிகிச்சை வரை சென்ற கருப்பைத் தொல்லை மாற்று முறை வைத்தியத்தில் சீராகும்.சகோதர, சகோதரி உறவில் மறுமலர்ச்சி உண்டாகும்.
தாய் வழிச் சொத்தும், சீதனமும் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். 26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் குருவும் கேதுவும் இணைந்து சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் ஒன்றிரண்டு நிறைவேறாமல் போகலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். மன அமைதி குறையும் சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(1.11.2026 முதல் 13.12.2026 வரை) அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள்.கல்வி தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர வாய்புகள் உள்ளது. 14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.சுமார் 85 நாட்கள் அதிசாரம் மற்றும் வக்ரகதியில் குரு பகவான் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பதால் தொழில் உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சுய ஜாதகம் அறிந்து செயல்பட வேண்டும்.
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை வேல் வழிபாடு செய்வதால் மனதும் உடலும் புத்துணர்வு பெறும்.குலதெய்வத்தையும் முன்னோர் களையும் வழிபடுவதால் ஒன்பதாமிட குருவால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406