கும்பம்- 2026 சித்திரை மாத ராசிபலன்

உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம்.
கும்பம்- 2026 சித்திரை மாத ராசிபலன்
Published on

உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே!

ராசி அதிபதி சனி தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. குடும்ப தேவைகளுக்கு மேல் உபரி வருமானம் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறமையால் உறவுகளை பாசப் பிணைப்பில் கட்டுவீர்கள். சொல் வலிமை, வாக்குபலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனைக்கு உற்றார் உறவினர்கள் செவி சாய்ப்பார்கள்.

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை குருவைச் சாரும். எந்த செயலிலும் விரைந்து செயல்பட்டு தெளிவாக முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம். தைரியம், தெம்பு , ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இது வரை அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பிரயாணங்கள் செய்ய நேரும். முறையற்ற ஆவணங்களால் வம்பு , வழக்கு , பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் சொத்தை சகோதர, சகோதரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆடை ,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலர் நடக்காததை நடப்பது போல் கற்பனை செய்வார்கள்.சிலருக்கு செவித்திறன் குறைபாடு வரலாம்.கும்ப ராசியினருக்கு குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளதால் ஏழரைச் சனி மற்றும் ராகு/கேதுவின் தாக்கம் உங்களை பாதிக்காது. குடும்ப ஸ்தானாதிபதி குரு பஞ்சம ஸ்தான அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுவதால் சிலர் தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்து விடுபடலாம்.

குடும்ப தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும்.

சம்பந்திகள் சண்டை முடிவுக்கு வரும். விருந்து உபசாரம் மற்றும் சுப நிகழ்வுகளால் வீடு கலகலப்பாக மாறும். தவறான புரிதலால் விலகிச் சென்ற உறவுகள் உண்மை நிலை புரிந்து மீண்டும் உறவாடுவார்கள்.

வரன் பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு இன்றி திருமண முயற்சி செய்வது நல்லது.மகன், மகளின் திருமணம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். மாணவர்கள் அதிக நேரம் ஒதுக்கி படித்தால் பள்ளி இறுதி தேர்வில் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் கை, கால், மூட்டு வலி இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு வைத்தியம் நல்ல பலன் தரும்.

பொருளாதாரம்

பேச்சுத் திறமை வருமானத்தை அதிகரிக்கும். பற்றாக்குறை வருமானம் பிள்ளைகளின் பங்களிப்பால் உபரி வருமானமாகும். வீட்டில் மகாலஷ்மி வாசம் செய்வாள்.குடும்பத்திற்கு நிலையான நிரந்தமான வருமானம் கிடைக்கும். வாங்கிய கடனை திரும்பச் செலுத்தி நாணயத்தை காப்பாற்ற இயலும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு தொகையை வங்கியில் சேமிப்பீர்கள்.இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும்.

தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொல்லை குறையும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.

பெண்கள்

திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். ஆரோக்கியம் சிறப்படையும்.

மருத்துவச் செலவு குறையும்.வீடு, வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள்

தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவீர்கள்.

வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள் அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த மாதம் அமையும்.

முதலீட்டாளர்கள்

தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள்.தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு இது பொற்காலம்.நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள்.தொழில் போட்டியாளர்களை புறமுதுகு காட்டி ஓட வைப்பீர்கள்.

அரசியல்வாதிகள்

தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் திறமையை மேலிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய நல்ல சந்தர்ப்பம் உருவாகும். அதை முறையாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

இதனால் பல அரசியல் பிரமுகர்களுக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். முக்கிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். பெரிய பதவிகள் கிடைக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.

கவனமாக செயல்பட வேண்டிய காலம்:

சனி + செவ்வாய் சேர்க்கை ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராசி அதிபதி சனியும் 3,10ம் அதிபதி செவ்வாயும் சேர்க்கை பெறுகிறார்கள் சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரலாம். ஞாபக சக்தி குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும். சிலர் சட்டச் சிக்கல் நிறைந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம்.

அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சனை ஏற்படலாம். உயர் கல்வி முயற்சி சிறு தடைக்குப் பின் சீராகும். தந்தைக்கும் சகோதரருக்கும் கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.அண்டை, அயலாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உங்களின் பூர்வீகம், சுய சம்பாத்திய சொத்துகளில் ஆவணங்கள் தொடர்பான குழப்பம் உங்களை கவலையில் ஆழ்த்தும்.

உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.பொன், பொருளை ஏமாந்து பிறருக்கு விட்டு கொடுக்கும் நிலை உருவாகலாம்.

பரிகாரம்:

சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து குல இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து வர முத்தாய்ப்பான மாற்றங்கள் தேடி வரும். சனிக்கிழமைகளில் பறவை களுக்கும் பட்சிகளுக்கும் உணவிடுவதால் வறுமை கடன் தொல்லை அகலும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com