

உழைக்கும் ஆர்வம் நிறைந்த மகர ராசியினரே!
ராசி அதிபதி சனி வெற்றி ஸ்தானத்தில் 4, 11ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்று உள்ளார். தொழில், உத்தியோகத்தில் இடப் பெயர்ச்சியைத் தருவார். பாகப்பிரிவினை தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடக்கும். முக்கியமான ஆவணங்களை கை மறதியாக வைத்துவிட்டு தேடுவீர்கள்.
சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சி பலிதமாகும். அஷ்டமாதிபதி சூரியன் 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சொத்துக்கள் தொடர்பான செயல்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தாயின் ஆரோக்கியத்திற்கு வைத்தியம் செய்ய வேண்டிய நேரம். போட்டி, பகை, கடன்தொல்லை, வேலை, தொழில் பாதிப்பு குறையும்.
உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். பெண் வழிப் பிரச்சனைகள் அகலும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காக வெளியேறலாம்.
பங்கு சந்தை ஆதாயம் மகிழ்விக்கும். உடலில் அசதி, கை, கால் வலி அதிகமாக இருக்கும்.முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும்.
அது வாழ்க்கைத் துணையாகவோ குழந்தையாகவோ இருக்கலாம்.2, 8ல் ராகு கேது நிற்பதால் சிலருக்கு திருமணத் தடை நீடிக்கும் அல்லது திருமண முயற்சியில் நேரம், காலம், பணம் போன்ற விரயங்கள் இருக்கும். சனிபகவானின் கடும் பகைவரான ராகு தசை நடப்பவர்களுக்கு ஜென்மச் சனி முடியும் வரை திருமண வாய்ப்பு குறைவு.
தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தாய்வழி சொத்து தொடர்பான விசயத்தில் தாயின் ஆதரவு சகோதர, சகோதரிகளுக்கே கிடைக்கும்.ஆனால் மூத்த சகோதரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் இந்த சித்திரை மாதத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.
பொருளாதாரம்
தன ஸ்தானத்தில் குரு .பார்வை பதிவதால் வட்டிக்கு வட்டி கட்டி மீளமுடியாத கடன் தொல்லையில் இருந்து மீள முடியும். நிலுவையில் உள்ள வராக்கடன்கள் வசூலாகும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்கும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம் .
வெகு சிலருக்கு அடமானத்திவிருக்கும் சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புதிய சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும்.
சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். வரவிற்கு இணையான செலவும் இருக்கும். விரயத்தை சுப செலவாக மாற்றுவதில் உங்களின் புத்திசாலித்தனம்.
பெண்கள்
பெண்களுக்கு இந்த மாதத்தில் நன்மைகள் அதிகமாக இருக்கும் குடும்பத்திலுள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும் . உங்களின் கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதை உடனே நடத்துவார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள் .பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பணவரவு சரளமாக இருக்கும். சொந்த வீட்டு கனவு நிறைவேறும்
உற்றார், உறவினர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பீர்கள். குடும்ப உறவுகளுடன் சுப நிகழ்ச்சிகள், ஆடம்பர விருந்து உபச்சாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். தான, தர்மம் செய்வதில் விருப்பம் அதிகரிக்கும்
உத்தியோகஸ்தர்கள்
கடந்த சில மாதங்களாக அனுபவித்து வந்து கடன், எதிரி, நோய் தொல்லை, விரயம்,கூட்டுத் தொழில், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும் காலம் வந்து விட்டது. குரு வெகு விரைவில் ஏழாமிடம் வந்து ராசியைப் பார்க்கிறார். குருப் பார்வை ராஜயோகத்தை தரப்போவதால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும்.
அதன் பலன் தற்போதே தெரியத் துவங்கி விடும். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும். உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உழைப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
உழைப்பிற்கான ஊதியம் கிடைக்க காலதாமதமாகும். தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. உங்கள் இயல்பான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடந்த கால நெருக்கடி நிலை மாறும் .
தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும்.சில அரசு ஊழியர்கள் பதவி உயர்வு என்ற பெயரில் பிடிக்காத ஊருக்கு சென்று கடமையாற்றும் சூழல் உண்டாகும்.
முதலீட்டாளர்கள்
தொழில்ஸ்தான அதிபதி சுக்ரன் அஷ்டமாதிபதி சூரியனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.தொழில் ரீதியான பய உணர்வு, மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.கடுமையாக உழைக்க நேரும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும்.திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.திடீரென ஏற்றமும் எதிர்பாராத ஏமாற்றமும் தர வாய்ப்பு உள்ளது. யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. பெரிய தொழில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மிகப் பெரிய புகழ் கிடைக்கும். கையில் பணம் புரளுமா? வங்கி கணக்கில் உபரி பணம் சேமிப்பாக இருக்குமா? என்பது சந்தேகம்.
அரசியல்வாதிகள்
பெயரை நிலை நிறுத்தும் வகையிலான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்ட செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஆனால் கட்சியில் உங்கள் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. அரசியல் வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்பு ஏற்படும். கட்சி தொடர்பான வழக்குகளில் சிக்கினால் உங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்:
சனி+செவ்வாய் சேர்க்கை ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் ராசி அதிபதி சனியும் 4,11ம் அதிபதி செவ்வாயும் சேர்க்கை பெறுகிறார்கள்.எந்த செயலாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். வேகத்தை விட விவேகம் முக்கியம். இந்த காலகட்டத்தில் சில படிப்பினைகளை கற்றுக்கொள்வீர்கள்.
சிலர் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கலாம். வருமான வரி, விற்பனை வரி மற்றும் தொழில் தொடர்பான முக்கிய ஆவணங்களை சரியாக வைத்து இருக்க வேண்டும்.வட்டி தொழில் , சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ், அடமானக் கடை , பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்கள் பணப் பரிவர்தனைக்கு முறையான ஆதாரம் வைத்து இருக்க வேண்டும். நெருங்கிய ரத்த பந்த உறவுகளுடன் தேவையற்ற கருத்துப் பரிமாற்றத்தை தவிர்க்கவும்.
பண மோசடி மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.
சிலருக்கு எதிர் பாலினத்தினரால் வம்பு, மனச் சங்கடம் உருவாகும். சில ஆண்கள் மற்றும் பெண்கள் இது போன்ற காலகட்டத்தில் மன ஆறுதலுக்காக குடும்ப விஷயத்தை பிறருடன் பகிரக் கூடாது. பூர்வீக சொத்து தொடர்பான செயல்களை ஒத்தி வைக்கவும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.
பரிகாரம்:
சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற தான தர்மம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406