விருச்சகம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்

சிலர் வயோதிகம் காரணமாக பூர்வீகத்தில் வீடு கட்டி செட்டிலாகுவார்கள்
விருச்சகம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்
Published on

விருச்சகம்

எதிலும் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றிவாகை சூடும் விருச்சக ராசி யினருக்கு பிறக்கப்போகும் பராபவ ஆண்டு ராஜயோக ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் பஞ்சமஸ்தானத்தில் நின்று பலன் தருவார். இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் நின்ற குரு பகவான் 2.6.2026 முதல் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் செல்கிறார்.

5.12.2026 வரை கேது பகவான் பத்தாம் இடத்திலும் ராகு பகவான் நான்காம் இடத்திலும் சஞ்சரிப்பார்கள். அதன் பிறகு ராகு பகவான் வெற்றி ஸ்தானத்திற்கும் கேது பகவான் பாகிஸ்தானத்திற்கும் செல்வார்கள்.

பராபவ ஆண்டு பொது பலன்கள்

ஆற்று மணலைக் கூட அளந்துவிடலாம் விருச்சிக ராசியினரின் மனதை அளக்க முடியாது. அந்த அளவுக்கு மனதில் ரகசியங்களை தேக்கி வைத்திருப்பார்கள். எந்த விஷயத்தையும் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். இந்த பராபவ ஆண்டு ஏற்படக்கூடிய அனைத்து கிரக பயிற்சிகளும் விருச்சக ராசியினருக்கு மிக மிக சாதகமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

12 ராசிகளில் விருச்சிக ராசிக்கு இது பொற்காலமாகும்.குல தெய்வ அனுகிரகம் ஏற்படும் காலம் . குல தெய்வ தோஷம், சாபம் இருந்தால் சரி செய்ய மேற்கொள்ளும் வழிபாடு பலன் தரும். குரு சாபம், பிராமணர்களின் சாபத்தால் உருவாகும் பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய உகந்த காலம். புத்திர சோகம் விலகும்.பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கும் குருபகவான் பிள்ளை பேறு வழங்குவார்.

எனவே கர்மம் செய்ய புத்திரம் பிறப்பான். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்களைக் கூட அதிர்ஷ்டம் விரும்பும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.சிறிய உழைப்பில், குறைந்த முயற்சியில் விட்டதை பிடிக்கப் போகிறீர்கள். சிலர் வயோதிகம் காரணமாக பூர்வீகத்தில் வீடு கட்டி செட்டிலாகுவார்கள்.

எதிரிகள் புறமுதுகு காட்டுவர்.கூட்டுத் தொழில், நண்பர்கள் போன்ற விசயங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது.பல சாதகமான சூழல் இருந்தாலும் சில தடை தாமதங்களும் உண்டு. மனக் குழப்பம், தடுமாற்றம் உடல் நலக் குறைவு இருந்தாலும் சரியாகிவிடும்.இந்த புத்தாண்டு உங்கள் தேவைகளை நிறைவு செய்யும்.

திருமண முறிவு ஏற்பட்டு அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் பிரிந்து வாழும் கணவன், மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வர்கள். மனக்கசப்புகள் மாறும். ஓய்வு எடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும்.உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் குறையும்.

எந்த மனபாரமும் இல்லாமல் சிந்தித்து நிதானமாக செயல்படுவீர்கள்.குல,இஷ்ட தெய்வ கோவில்களுக்கு சென்றுவர நீங்கள் போட்ட திட்டங்கள் பலிதமாகும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

விசாகம் 4

திட்டமிட்டு வெற்றி பெறும் வருடம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குரு பகவான் உச்ச பலம் பெற்று இருக்கிறார்.மனதில் நிறைவும் நெகிழ்சியும் உண்டாகும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை நடத்திய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும்.

மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும்.ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும்.

கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்துக்களின் தீர்ப்பு சாதகமாகும்.திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். தங்கம், வெள்ளி,அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும். காரியத்தடை, மன சஞ்சலம் குறையும்.

கணவர் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பும்.வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். உங்களின் கெளரவம், அந்தஸ்து உயரும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.

அனுஷம்

சகாயங்கள் நிறைந்த வருடம். குரு பகவான் உச்சம் பெறுவதால் தடைபட்ட பாக்கிய பலன்கள் சித்திக்கும். மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள்.

புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.தொழில் விரிவாக்க கடனும் கிடைக்கும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும். நல்ல வருமானம் வரும்.

பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.

ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும்.வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும்.காதலர்கள் இடையே சிறிய தவறுகள் பெரும் கருத்து வேறுபாடுகளாக மாறும்.

கேட்டை

சுப பலன்கள் நடக்கும் வருடம். 2,5 எனும் பண பர ஸ்தான அதிபதி குரு உச்சம் பெறுகிறார்.புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள். நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.பணக்கவலை குறையும்.

பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும்.கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.

இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். புது வீடு கட்டலாம்.சுப விரய செலவுகள் ஏற்படும். அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும்.

புத்திர பிராப்தம் கிடைக்கும். சிலர் கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும்.காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும்.

திருமணம்

பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கியஸ்தானமும் பலம் பெறுவதால் சுய ஜாதகத்தில் எவ்வளவு பெரிய திருமணத்தடை இருந்தாலும் அகலும்.காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும்.காலம் தாழ்த்தாமல் நிச்சயித்த திருமணத்தை உடனே நடத்த வேண்டும்.

பெண்கள்

இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் வருடம். தமிழ் புத்தாண்டு கிரக நிலவரங்கள் மிகச் சாதகமாக உள்ளது.இது உங்களுக்கு மங்களகரமான பலன்களை வழங்க கூடிய அமைப்பாகும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும். இது சமூகத்தில் பிரபலத்தை ஏற்படுத்தும் யோகமாகும். மனதில் சந்தோஷமும் அமைதியும் குடிபுகும்.

அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு மிகச் சிறப்பான காலமாகும்.குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவருடன் அனுசரித்துச் செல்லவும். திருமண வயதில் உள்ள பிள்ளைகளின் திருமணம் பிரம்மாண்டமாக VIP வீட்டு திருமணம் போல் சிறப்பாக நடைபெறும்.

பொருளாதாரம்

பணபர ஸ்தானங்கள் குரு மற்றும் சனியினால் பலம் பெறுகிறது. வேலைப்பளு கூடினாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், அன்றாடம் அழியக்கூடிய பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைப்படும் போதெல்லாம் பணவசதி கிடைக்கும்.பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ராகு, கேதுக்கள் எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது. பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம் வியாழக்கிழமைகளில் ஸ்ரீ குபேர லட்சுமி வழிபட தன நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com