துலாம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்

கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம்.
துலாம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்
Published on

துலாம்

மகிழ்ச்சியை விரும்பும் துலாம் ராசியினரே! பிறக்கப் போகும் பராபவ ஆண்டு உங்களுக்கு அமோகமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் முழுவதும் சனி பகவான் உங்களுக்கு ஆறாம் இடமான ருணா ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.

வருட ஆரம்பத்தில் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் 2.6.2026 முதல் பத்தாம் மிடமான தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். 5.12.2026 அன்று கேது பகவான் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். ராகு பகவான் நான்காம் இடமான சுகஸ்தானத்திற்கு செல்கிறார்.

பராபவ ஆண்டின் பொது பலன்கள்

தராசை ராசியின் சின்னமாக கொண்ட துலாம் ராசியினர் ஆதாயம் இல்லாத செயலில் ஈடுபட மாட்டார்கள்.இந்தப் புத்தாண்டை பொருத்தவரை சனிபகவான் உங்களுக்கு மிக மிக சாதகமாக உள்ளார். எதிர்கால நன்மைக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். உங்கள் தேவைக்கு அதிகமாக பணப் புழக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி வாய்ப்பு அல்லது பதவி உயர்வு ஏற்படும்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவிகள், பொறுப்புகள் தாமாகவே வந்து சேரும்.

பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பது பழமொழி. டிசம்பர் மாதம் முதல் அங்கே கேதுவும் சேர்வதால் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். சிலர் பெரும் பண ஆசையால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்து நீதிமன்றம் செல்ல நேரும் அல்லது சிறை தண்டனை அனுபவிப்பார்கள்.

கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்கள், நெருக்கமானவர்கள் முதுகில் குத்தும் நேரம் என்பதால் உறவினர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது.

சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பும் கிடைக்கும். யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பது நல்லது.அரசு ஊழியர்களுக்கு விரும்பாத ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். எதையும் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும்.அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம்.வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கக் கூடாது.

சித்திரை 3,4

உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் வருடம். குடும்ப ஸ்தானத்திற்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார். இதனால்பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும்.

இதுவரை நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும். சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ப வீடு, வாகன முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது. மாணவர்கள் கல்விக்காக வெளியூருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.குடியிருப்புகளில் இருக்கும் வாடகைதாரர்கள் மாறுவார்கள்.

வியாபாரம் பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜயோகம் தரும் காலமாகும்.சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட தன லாபம் கிடைத்து அதன் மூலம் சட்ட நெருக்கடியும் ஏற்படலாம்.

உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும்.குல, இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.

சுவாதி

தடை தாமதங்கள் அகலும் வருடம். கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியமாக செயல்படுவீர்கள்.

மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். கடந்த ஒரு வருடமாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும்.

குடும்ப பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். தம்பதிகளின் கருத்து வேறுபாடு மறையும். இல்லத்தரசிகளுக்கு மிக சாதகமான நேரம்.மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வெற்றி தரும்.

உடன் பிறந்தோரிடம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் மறையும். பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்தால் மன உளைச்சல் ஏற்படாது. ஆன்மீக யாத்திரை சென்று வருவீர்கள். முன்னோர்கள் வழிபாட்டில் மனநிறைவு கூடும்.

விசாகம் 1, 2, 3,

மனவலிமை அதிகரிக்கும் வருடம்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். வாக்கு தோஷம் நிவர்த்தியாகும்.வாக்கு வன்மை அதிகரிக்கும். அமைதியை விரும்புவீர்கள். நியாயம்,தர்மம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.

பிரிந்த குடும்ப உறவுகள் நடந்ததை மறந்து கூடி மகிழ்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும் ஆடம்பர விருந்துகளும் நடந்து கொண்டே இருக்கும். நல்ல விதவிதமான உணவு சாப்பிடும் யோகம் உண்டாகும்.பேச்சைத் தொழிலாக கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் பணமாக காய்க்கும்.பணப் பற்றாக்குறை அகலும்.

கையில் ஐந்து ரூபாய் பணம் இல்லாமல் ஆரம்பித்த சுப காரியங்கள் வெகு விமரிசையாக, ஆடம்பரமாக நடக்கும்.

திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு வேண்டிய பொருள் வரவு தேடிவரும். கண்களிலுள்ள குறைபாட்டை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய ஏற்ற காலம். கலைத்துறையினருக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர உறவு மேம்படும்.திருடு போன பொருட்கள் கிடைக்கும்.

திருமணம்

குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் திருமணத் தடை அகலும். மனதிற்கு பிடித்த காதல் மண வாழ்க்கை அமையும். திருமணத்திற்கு பெற்றோர்கள், பெரியோர்கள் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

அதே நேரத்தில் எட்டாம் இடத்தை சனி பார்ப்பது பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்தலாம். சுய ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் அதற்கான பரிகாரங்களை செய்தால் உடனே திருமணம் நடக்கும்.டிசம்பர் மாதம் முதல் ராகு கேதுவின் மையப் புள்ளியில் ராசியும் ஏழாம் இடமும் அமையப்போவதால் அதற்கு முன் திருமணத்தை நடத்துவது உத்தமம்.

பொருளாதாரம்

ராசிக்கு 2,4,6ம் மிடத்திற்கு குருப் பார்வை இருக்கிறது. 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை உள்ளதால் ஒருவர் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் உபரி லாபத்தால் சீராக இயங்கும்.குடும்ப தேவைகள் நிறைவேறும் .

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். வருமானப் பற்றாக்குறை அகலும். ஆறாம் இட சனி பகவான் கடன் இல்லாமல் வாழும் பாக்கியத்தை ஏற்படுத்தித் தருவார். இதற்கு மேல் கடன் வாங்காமல் இருப்பது உங்களது சாமர்த்தியத்தில் உள்ளது.

சொத்துக்களின் மதிப்பு உயரும். தாயின் மூலம் திரண்ட சொத்துக்கள், பணம், நகைகள் கிடைக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்கக் கூடிய வகையில் வாழ்வாதாரம் உயரும். விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும்.

பெண்கள்

மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.ஏற்றம், இறக்கம் நிறைந்த மனித வாழ்க்கையில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் அதிகமாகும். பல பெண்கள் அரசின் ஆதரவு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். தாய்வழிச் சொத்து பாகப் பிரிவினையில் தாயின் ஆதரவு குறையலாம். வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்நாள் வசந்தமாகும்.

பரிகாரம் துலாம் ராசியில் பிறந்தவர்கள் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபட சுய ஜாதகரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகி கோட்ச்சார கிரகங்களால் நன்மைகள் நடக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com