சிம்மம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்

சுப விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.
சிம்மம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்
Published on

சிம்மம்

நிர்வாக திறமை நிறைந்த சிம்ம ராசியினரே பிறக்கப் போகும் பராபவ ஆண்டு உங்களுக்கு எண்ணங்களை ஈடேற்றி தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். இதுவரை உங்களுக்கு லாப குருவாக பலன் தந்த குரு பகவான் 2.6.2026 முதல் விரயகுருவாக பலன் தருவார்.

ஆண்டு முழுவதும் சனிபகவான் அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரிப்பார். 5.12.2026 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரித்த கேது பகவான் 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார்.ராகு பகவான் ஆறாமிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்திற்கு செல்கிறார்.

பராபவ ஆண்டு பொது பலன்கள்

ஆயிரம் பேருக்கு மத்தியில் தனித்தன்மையுடன் செயல்படும் சிம்ம ராசியினருக்கு அஷ்டமச் சனி மற்றும் விரயகுரு காலம் என்பதால் சிந்தனையிலும், செயலிலும் நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். அஷ்டம ஸ்தான சனியை விரயகுரு பார்ப்பதால் அஷ்டமச் சனியின் தாக்கமும், பயமும் குறையும். இன்னல்கள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தைரியம் மனப்பக்குவம் ஏற்படும்.

கவுரவப் பதவிகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும்.மனதில் அமைதி குடிபுகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட பிணக்குகள் மறையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தம்பதிகள் ஒருவர் மேல் மற்றவர் அன்பை பொழிவார்கள். மனைவி வழிச் சொத்து மற்றும் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன சஞ்சலம் அகலும். சுப விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.

வேலையில் இட மாற்றம் வரலாம். அரசு உத்தியோக முயற்சி பலன் தரும். சிலர் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். பூர்வீகச் சொத்து விற்பனையில் நிலவிய சர்ச்சைக்கள் அகலும். பரம்பரை நோய்க்காக வைத்தியம் செய்ய நேரும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கடன் பெற நேரும்.

காதல் மோதலில் முடியும். புதிய முயற்சிகளால் அதிக அலைச்சல் கடன் உருவாகலாம். சரியான நேரத்திற்கு உண்ண உறங்க முடியாது. ஜாமீன் சார்ந்த விசயங்கள் சங்கடங்கள் மற்றும் தடுமாற்றம் வரலாம். இந்த காலகட்டங்களில் பணத்தை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பொன், பொருள் பற்று குறையும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள். சிலருக்கு முன்னோர் வழி கர்ம வினை தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும்.உடல் அசதி உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.

மேலதிகாரிகள் உங்கள் பணியில் ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். உணர்ச்சி வசப்படாமல் உங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிய ஆயுள் காப்பீடு, மெடிக்லைம் பாலிசிகள் எடுக்க உகந்த நேரம்.மாணவர்கள் சாமர்த்தியமும் அறிவுத் திறமையையும் தேர்வில் வெளிப்படும். வெளிநாட்டு பயணத்தில் மாற்றம் உண்டாகும். உத்தியோகம், தொழில் போன்றவற்றில் புதிய மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். வீண், வம்பு, வழக்கு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.

மகம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வருடம். ராசியை விட்டு கேது பகவான் விலகப் போகிறார். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட பொருள் வரவு உண்டு. சிலரின் விருப்ப விவாகம் சித்திக்கும். விவாகரத்து வழக்குகள் சாதகமாகும். நீண்ட நாட்களுக்குப் பின் தாய் மாமாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களை, தொழில் கூட்டாளிகளை வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது சிறப்பு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் முறையான பாகப் பிரிவினை நடக்கும்.தொழிலில் தொடர்பான நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்ந்து வளமான எதிர்காலம் அமையும். நீண்டகாலமாக அனுபவித்து வந்த மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது.தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி உண்டாகும். கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.

பூரம்

செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும் வருடம். கவலைகள், கஷ்டங்களை விரட்டி அடிக்கும் விதமான சந்தர்ப்பம் அமையும். தடைபட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மங்களகரமான நிகழ்ச்சியால் மன நிம்மதியும் உண்டாகும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும்.திருமணத் தடைகள் அகலும்.பொருளாதார மாற்றதால், மேன்மையை அடைவீர்கள். எதிர்பார்த்த அரசு சலுகைகள், உதவிகள் கிடைக்கும்.

பல புதிய தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள்.உங்களை களங்கப்படுத்திய வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களின் உதவியால் நிதி நிலை உயரும்.அலுவலக பணிகள் சுமூகமாகும். பணி நெருக்கடிகள் அகலும்.சிலருக்கு உழைக்காத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். உங்களின் மேல் அக்கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கிய சந்தர்ப்பமாக இந்த ஒன்றரை ஆண்டுகள் இருக்கும்.

உத்திரம் 1

முன்னேற்றமான வருடம்.முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் அவரவர் வயதிற்கேற்ற நல்ல விஷயங்கள் இப்போது நடக்கும். கடின உழைப்பே லாபத்தை ஈட்டித்தரும். நன்மக்கள் பேறும் உண்டு. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கு கடன் வாங்க நேரும்.

பூர்வீகச் சொத்து விற்பனையைத் தள்ளிப் போடவும். உங்கள் உடன்பிறப்புகள் பண உதவி கேட்கலாம். சிலருக்கு மத மாற்ற சிந்தனை மேலோங்கும். போட்டி, பொறாமை, எதிரி, கடன் இவற்றின் பாதிப்புகள் குறையும்.ஜாமீன் கொடுப்பதையும், பெறுவதையும் தவிர்க்கவும்.

சிலருக்கு வேலையாட்களால் சிறு மன சஞ்சலம் உண்டாகும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ சொத்து, பங்குபத்திரம் வாங்குவீர்கள். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம் அல்லது விரயச் செலவு அதிகமாகும். சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வெளிநாட்டில் செட்டிலாகும் வாய்ப்பு ஏற்படும். இடது கண்ணில் சிறு உபாதைகள் தோன்றி மறையும் அல்லது அறுவை சிகிச்சை செய்ய நேரும்.

திருமணம் அஷ்டம சனி முடியும் வரை திருமணத்தை தவிர்ப்பது நல்லது. மறு விவாகத்திற்கு முயற்சிப்பவர்கள் வரன் பற்றி தெளிவாக விசாரித்த பிறகு முடிவு கூறுவது நல்லது.

பொருளாதாரம்

பங்குச் சந்தை, பங்கு பத்திர முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு பல மடங்காக அதிகரிக்கும்.விரய ஸ்தானத்தில் குரு இருப்பதால் பண விஷயத்தில் சற்று நெருக்கடி இருக்கும் அல்லது விரயச் செலவு அதிகமாகும். சொந்த வீடு அல்லது மனைகள் வாங்கும் யோகம் உள்ளது.

நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். பிறருக்கு ஜாமீன் போட்டால் கடன் தொகைக்கு நீங்களே பொறுப்பு ஏற்க நேரும் என்பதால் கவனம் தேவை. சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் கடனை அதிகரிப்பார்கள். சிலருக்கு கடனுக்கு பயந்து வைத்தியச் செலவு வரும்.

பெண்கள்

தடைபட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும் வருடம்.உங்களுடைய மாறுபட்ட சிந்தனை ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முன்னேற்றமான பலன்கள் நடைபெறும். குடும்ப சுப விசேஷங்கள் மற்றும் ஊர் பண்டிகைகளில் கலந்து மகிழ்வீர்கள். குல, இஷ்ட தெய்வத்திற்கு சிலர் புதிய பிரார்த்தனைகள் வைப்பார்கள்.

மறைமுக லாபம் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். சொந்தவீடு, மனை, வாகனம் வாங்கும் சிந்தனை மேலோங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம் மாதம் ஒருமுறை திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வருவதால் கோட்ச்சார கிரகங்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com