

மிதுனம்
எதார்த்தவாதியான மிதுன ராசியினரே! பிறக்கப் போகும் பராபவா வருட தமிழ் புத்தாண்டு காரிய சித்தி உண்டாகும் வருடமாக அமைய நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் முழுவதும் சனிபகவான் ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
வருட துவக்கத்தில் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 2.6.2026 முதல் தனம் வாக்கு குடும்பஸ்தானம் சென்று பலன் தருவார். 5.12.2026 முதல் கேது பகவான் தன ஸ்தானத்திலும், ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள்.
பராபவ ஆண்டு பொது பலன்கள்
இயல்பாகவே உள்ளுணர்வால் எதிர் வரக்கூடிய நன்மை தீமைகளை அறியக்கூடிய சக்தி நிறைந்தவர்கள் மிதுன ராசியினர் என்றால் அது மிகையாகாது. தற்போது கேந்திரமும், திரிகோணமும் பலம் பெறுவதால் மிதுன ராசியினர் நிம்மதி பெருமூச்சு விடலாம். கிணற்றில் விழுந்த கல்லாக இருந்த அனைத்து முயற்சிகளும் பலிதமாகும்.
வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் கடனில் இருந்து மீளக் கூடிய மார்க்கம் தென்படும்.பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கைவிட்டுப் போனது எல்லாம் தேடி வரும். தொழிலை இழுத்து மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் கூட வாழ்வில் செட்டிலாக்கி விடும் வகையில் மாற்றமான நல்ல சுப பலன்கள் உண்டாகும். சொத்து தொடர்பான வழக்குகள் முடிவிற்கு வரும்.
வீடு, நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. விவசாயி களுக்கு பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடி யாகும்.எல்லைத் தகராறு நீங்கும், பாகப்பிரிவினை சுமூகமாகும். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும். அதிக அலைச்சல் மிக பயணங்கள் செய்ய நேரும். புதிய தொழில் கூட்டாளிகள், ஒப்பந்ததாரர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வேலை, அரசு உத்தியோக முயற்சி பலன் தரும்.
சிலருக்கு தலைவலி, ஞாபக மறதி அல்லது காது, மூக்கு தொண்டை, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.சிலருக்கு மந்த தன்மையோடு எதிர்மறை சிந்தனையும் தோன்றி மறையும்.
ஆனாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். வீடு, அல்லது அலுவலகத்தை மாற்ற நேரும்.மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் தொழிலுக்கு தேவையான இன்சூரன்ஸ் செய்து கொள்வது நலம். பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம்.
மிருகசீரிஷம் 3,4
வாழ்க்கைத் தரம் உயரும் வருடம்.தனஸ்தானமும் தொழில் ஸ்தானமும் பலம் பெறுவது அற்புதமான கிரக நிலவரமாகும்.வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரும். தந்தை மகன் உறவு சிறக்கும்.
கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப் பெறுவீர்கள்.பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள்.தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம் வந்து விட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.குடும்பம் மகிழ்சியாக இருக்கும்.
தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் விலை உயர்ந்த அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.
திருவாதிரை
தடை தாமதங்கள் விலகி பாக்கிய பலன் உண்டாகும் வருடம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகமாகும். கடந்த கால நெருக்கடிகள் குறையத் துவங்கும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
வியாபாரம் நல்ல முறையில் நடக்கும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.மறைமுக ஆதாயம் உண்டாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும்.
மனைவி, பிள்ளைகளுக்கு தங்க நகைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம்.
உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் நேரம்.விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் நோய்த் தாக்கம் குறையும். பெரிய தொழில் அதிபர்கள் அரசிற்கு முறையான வருமான வரி, விற்பனை வரி போன்றவற்றை தாக்கல் செய்வது நல்லது.
புனர் பூசம் 1, 2, 3
சிறிய முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைக்கும் வருடம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். ஒரு மனிதனை சமுதாயத்தில் தலை நிமர்ந்து நிற்கச் செய்வது தொழில்.
இப்போது தொழில் ஸ்தானத்தை பார்க்கும் குரு தொழில் முன்னேற்றம் குறித்த கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றுவார். தொழில் மூலம் புகழ் அந்தஸ்து, கவுரவம் உயரும் . சமுதாயத்தில் தொழில் துறையில் முன்னிலையில் இருப்பவர்களின் நட்பு, அறிமுகம் கிடைக்கும்.
சிலர் கடன் பட்டு புதிய தொழில் துவங்கலாம்.நில புலன்கள், உயர்ரக 2,4 சக்ர வாகனங்கள் சேரும். இது வரை சொந்த வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு சொந்த வீடு, வாகனம் அமையும். விற்க முடியாமல் கிடந்த சொத்துகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். தடைபட்ட குத்தகை வருமானம் வசூலாகும். தாயின் அன்பு ஆசீர்வாதத்தில் மனம் லயிக்கும்.
திருமணம்
திருமணம் தொடர்பான பாவகங்களான 2,8ம் இடத்திற்கு குருவின் சம்பந்தம் இருப்பதால் குரு கடாட்சத்தால் இதுவரை தடை பட்ட திருமணம் இனிதாக நடந்து முடியும். மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் விலகும். உங்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணை அமையும்.
குருவருளாலும், திருவருளாலும் திருமணம் கோலகலமாக நடைபெறும். மறுதிருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு இழந்த இன்பம் மறுதிருமணத்தால் மீண்டும் கிடைக்கும்.
பொருளாதாரம்
தனம் வாக்கு குடும்பஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை ஏற்படப்போகிறது புதிய சொத்து வாங்குதல். விற்றல் போன்றவைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சொத்திற்காக தெரியாத நபரை நம்பி முன்பணம் கொடுக்க கூடாது. திடீர் அதிர்ஷ்டம் , உயில், காப்பீட்டு முதிர்வு தொகை போன்றவற்றின் மூலம் தன லாபங்கள் ஏற்படும். சிலருக்கு நீச வழியில் பொருளும் பிறரின் சொத்தும் கிடைக்கும்.
பெண்கள்
மிதுன ராசிப் பெண்களுக்கு இது வாழ்வியல் மாற்றம் தரும் வருடமாகும். இதுவரைநிலையான உத்தியோகம், தொழில் இல்லாமல் கவலையடைந்த பெண்களுக்கு நிலையான நிரந்தரமான உத்தியோகம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உங்களை உற்சாகப்படுத்தும்.
தொழில் வளர்ச்சி மற்றும் குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்கும். விண்ணப்பித்த கடன் தொகையும் வந்து சேரும்.வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் அகலும். கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பரிகாரம் மிதுன ராசியில் பிறந்தவர்கள் தினமும் மாலை வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட தொடர்ச்சியான வெற்றி உண்டாகும்.