ரிஷபம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்

கடன் பட்டு சொந்த வீடு வாகன கனவை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
ரிஷபம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்
Published on

ரிஷபம்

அழகு ஆடம்பரத்தை விரும்பும் ரிஷப ராசியினருக்கு பராபவ தமிழ் புத்தாண்டு ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்களுக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். வருட துவக்கத்தில் தனஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் 2.6.2026 அன்று மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கு செல்கிறார்.

வருட ஆரம்பத்தில் நான்காம் இடத்தில் நிற்கும் கேது பகவான் 5.12.2026 முதல் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் நுழைகிறார். பத்தாம் இடத்தில் நிற்கும் ராகு பகவான் ஒன்பதாம் இடமான பாக்யகிஸ்தானம் செல்கிறார்.

பராபவ ஆண்டு பொது பலன்கள்

தனக்கென்று தனி பாணியுடன் எதார்த்தத்துடன் வாழும் ரிஷப ராசியினருக்கு ஜோதிடத்தின் மேல் அதிக பற்று உண்டு. ஆனால் வெளித்தோற்றத்தில் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லாதது போல் காட்டிக் கொள்வார்கள். இந்த ஆண்டு உங்களுக்கு நடக்கக்கூடிய அனைத்து கிரக பெயர்ச்சிகளும் என் வழி தனி வழி என்று முனைப்புடன் செயல்பட்டு வெற்றியை தரக்கூடிய வகையில் உள்ளது.

இது அபரிமிதமான தொழில் வளர்ச்சிக்கு உரிய காலமாகும். ஒருவருக்கு நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் அமைந்து விட்டால் வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அந்தப் பொற்காலம் இப்பொழுது உங்களுக்கு தொடங்கிவிட்டது.

வருமானம் பெருகும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் ஒரு மனிதனின் முன்னேற்றம் என்பது பணவரவு மட்டுமல்ல. குருபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் கவுரவப் பதவிகள், மந்திர உபதேசம் பங்குச் சந்தை ஆதாயம், புத்திர பிராப்தம், உழைப்பு இல்லாத வருமானம், புதிய நட்பால் காதல் உருவாகுதல், பிள்ளைகளின் சுப விசேஷங்கள், பூர்வீகச் சொத்தால் ஆதாயம் போன்ற மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.நிலையான வாழ்வியல் முன்னேற்றத்திற்கு தேவையான தன்னம்பிக்கை, எதையும் சாதித்து முடித்து விடலாம் என்ற மனோதிடம்,அதிகரிக்கப் போகிறது.

சிந்தனை , செயல்பாடு ,நேர்மறை எண்ணங்கள் போன்றவைகள் மூலம் உங்களை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தப் போகிறீர்கள். துணிந்து எதிர்கால நலனுக்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்களை ஏளனம் செய்தவர்கள் வியக்கும் வகையில் பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்படப் போகிறது. வாழ்க்கையில் என்று விடிவு காலம் பிறக்கும் என்ற ஆவலுடன் வாழ்ந்தவர்களுக்கு விடியல் துவங்கிவிட்டது.கடன் பட்டு சொந்த வீடு வாகன கனவை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

சிலர் வீட்டை புதுப்பித்து விரிவாக்கம் செய்ய கடன் பெறலாம் அல்லது பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம்.

முயற்சி ஸ்தானத்திற்கு குரு செல்வதால் பள்ளியில் ஆசிரியர் நடத்தும் போதே மனதில் பதிய வைத்து விடுவீர்கள். கல்வியில் ஆர்வம் மிகும்.சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். சில அரசியல் பிரமுகர்கள் பதவி ஆசையில் தகுதிக்கு மீறி கடன் பட்டு எலக்சன் செலவு செய்து எதிரியையும் கடனையும் அதிகரிப்பார்கள்.

கிருத்திகை 2, 3, 4,

நன்மைகள் மிகுந்த வருடம். தொழில் ரீதியாக உறவுகள் ரீதியாகவும் அனுபவித்த மன சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலையில் மிக உன்னதமான நிலையை அடைவீர்கள்.கடனால் பட்ட கவலைகள், அவமானம் அகலும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இது மேன்மையான காலம். குடும்பத்திற்கு குல தெய்வ அருள் கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும்.

பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கினாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகும். திருமணம், கல்வி, புத்திரப் பேறு, உத்தியோகம், தொழில் போன்ற சுப பலன்கள் அதிகரிக்கும். அதற்கான சுப விரயங்களும் உண்டாகும். சிறு சிறு உட்பூசலுக்காக வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.தொழில், வேலை தொடர்பாக முக்கிய முடிவுகளை சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு செயல்படுத்துவது நல்லது.

ரோகிணி

சங்கடங்கள் குறைந்து சாதகங்கள் அதிகரிக்கக் கூடிய ஆண்டாகும். மகாலஷ்மியின் கனிவுப் பார்வை உங்கள் மேல் பதியப் போகிறது. சனி பகவான் ஆதரவு கரம் நீட்டி லாபத்தில் திளைக்க செய்யப் போகிறார். விரும்பிய சொந்த தொழில் வாய்ப்பு தேடி வரும். புதிய தொழில் துவங்க, தொழில் கிளைகள் திறக்க, தொழிலை விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை கிடைக்கும்.வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். தற்போது சுப விரயச் செலவுகளான திருமணம் வீடு கட்டுதல், வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளுதல் புதிய முதலீடு செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். வெளிநாட்டு குடியுரிமை சாத்தியமாகும். பதவி உயர்வு கிடைத்து பொறுப்புகள் அதிகரிக்கும். குல, இஷ்ட, தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும்.

மிருகசீரிஷம் 1, 2

மிகப் பொன்னான வருடம்.முன்பு ஏற்பட்ட நஷ்டங்கள் இப்பொழுது பணமாக காய்க்கும்.அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களை தேடி வரும்.பொதுக் காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகும். உயர்கல்வி, மருத்துவகல்விகள், ஆராய்ச்சி சார்ந்த கல்விகள் போன்ற கல்வி பயில சிறப்பான காலம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

விரும்பிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் தாமதம் உள்ள தம்பதியினர் உரிய மருத்துவம் செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர்.

திருமணம்

குரு பெயர்ச்சி ஆனவுடன் ராசிக்கு ஏழாமிடமான விருச்சகத்திற்கு குரு பார்வை பதிவதால் களத்திர தோஷம் அகலும்.திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடைபெறும்.

ராசியை சனி பார்ப்பதால் சிலருக்கு வரன் பற்றிய முடிவு செய்வதில் மனக்குழப்பம் வரலாம். ராசியை சனி பார்ப்பது புனர்பூ தோஷம் என்பதால் நல்ல வரனை சிலர் தவறவிடுவார்கள்.

பொருளாதாரம்

சிறிய முயற்சியில் கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும்.மறைமுக வழிகளில் இலாபங்கள் பெருகி உங்களைத் திக்கு முக்காடச் செய்யும். இன்சூரன்ஸ், ஏலச்சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை, லாட்டரி, ரேஸ், திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து கைக்கு கிடைக்கும்.

ராசிக்கு மூன்றாம் இடத்தில் குருகேது சேர்க்கை ஏற்படப் போவதால் பங்குச் சந்தை , ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. வரவு இல்லாமல் இருந்தால் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை.

பெண்கள்

அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும் வருடம்.பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல், வாஸ்துப்படி வீட்டை திருத்தி அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நல்லிணக்கம் ஏற்படும்.சிலர் தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயரலாம்.கை மறதியாக வைத்த நகைகள், சொத்து பத்திரங்கள் கிடைக்கும். பல வங்கி ஏறியும் கிடைக்காத வீட்டுக் கடன், தொழில் கடன் இப்பொழுது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.ஆரோக்கிய குறைபாட்டிற்கு வைத்தியம் செய்ய நேரும்.

பரிகாரம் வெள்ளிக் கிழமைகளில் அஷ்டலஷ்மியை வழிபட சங்கடங்கள் குறைந்து சாதகங்கள் அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com