search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிரியார் பயிற்சி பள்ளி மாணவர் தற்கொலை: ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை
    X

    பாதிரியார் பயிற்சி பள்ளி மாணவர் தற்கொலை: ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை

    உளுந்தூர்பேட்டை அருகே மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து பள்ளி ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கேப்ரியேல். இவரது மகன் ஆரோக்கியநவீன் (வயது 21).

    இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பாதிரியார் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இரவு ஆரோக்கியநவீன், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு பயிற்சி பள்ளியில் இருந்து சேந்தமங்கலத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், திருநாவலூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் ஆரோக்கிய நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டை சோதனை செய்த போது அங்கு ஆரோக்கியநவீன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

    நான் படிக்கும் பாதிரியார் பயிற்சி பள்ளியில் கருப்பன் என்கிற ஜெயராஜ் என்பவர் போதக ஆசிரியராக உள்ளார். அவர் மற்ற மாணவர்களின் முன்னிலையில் என்னை முட்டிப்போட வைத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார். மேலும் தொடர்ந்து என்னை துன்புறுத்தி வந்தார். இதனால் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். இதனால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து எனது பயணத்தை முடித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த கடிதம் ஆரோக்கியநவீன் தனது கைப்பட எழுதியது தானா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஆரோக்கிய நவீனின் அண்ணன் சுனில்ராஜ் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது தம்பி சாவுக்கு காரணமான பள்ளி மீதும், போதக ஆசிரியர் கருப்பன் என்கிற ஜெயராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிரியார் பயிற்சி பள்ளி போதக ஆசிரியர் கருப்பன் என்கிற ஜெயராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×