

திசையன்விளை:
டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி.யாக நியமிக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா. இவர் நேற்று டெல்லி மேல்-சபையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் தெரிவித்து பேசினார். இதற்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெரும் சர்ச்சை உருவானது. இந்த நிலையில் சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டது.
இதை அறிந்த நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் சசிகலா புஷ்பாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் கோஷங்களை எழுப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியில் உள்ள அவருடைய வீடு மீது நேற்று மாலையில் 5 மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். சசிகலா புஷ்பாவை விமர்சித்து கோஷங்களை எழுப்பி விட்டு அவர்கள் சென்று விட்டனர்.
இந்த கல்வீச்சு சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. தகவல் கிடைத்தவுடன் உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவம் குறித்து யாரும் புகார் தெரிவிக்காததால், வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.