தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை

தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை
Published on

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்யதேசங்களுள் 3-வதாக விளங்குவதும் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள மேலசிங்கப்பெருமாள், நீலமேகப்பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களாகும்.

இந்த கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தஞ்சை ராமானுஜ தர்சன சபை ஆகியவை சார்பில் கருடசேவை பெருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை நகரில் உள்ள 24 பெருமாள்கள் கருடவாகனத்தில் எழுந்தருளி தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளில் வலம் வந்தனர். இந்த கருடசேவைவிழாவின் மறுநாள் ஆண்டுதோறும் நவநீதசேவை நடைபெறும். இதனை வெண்ணைத்தாழி உற்சவம் என்றும் அழைப்பர்.

இதையொட்டி நேற்று நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவகண்ணன், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 பெருமாள்கள் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு வெண்ணைத்தாழி அலங்காரத்துடன் கொடிமரத்துமூலையை வந்தடைந்தனர்.

பின்னர் கீழராஜவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு பெருமாள்கள் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வந்த வழியே அந்தந்த கோவில்களுக்கு 15 பெருமாள்களும் சென்றடைந்தனர். இன்று(திங்கட்கிழமை) காலை விடையாற்றிவிழா நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com