

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக ஜோ ரூட் திகழ்ந்து வருகிறார். 2022-ல் இவரிடம் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அப்போது இங்கிலாந்து டெஸ்ட் அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தற்போது இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் நைட் கிளப்பிற்கு சென்றார். அங்கு அவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, 2-வது டெஸ்டில் விளையாட தடைவிதித்துள்ளது.
இதன்காரணமாக நாளைய டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய போட்டிக்கு முன்னதாக இன்று செய்தியாளர்களை ஜோ ரூட் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து அணியின் கேப்டனாக மீண்டும் இங்கே அமர்ந்து உங்களிடம் பேசுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை... 0.1% கூட இல்லை. அணிக்கு எது சிறந்தது? இது என் மீதும் என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதுதான் என் மனதில் ஓடிய ஒரே சிந்தனை. இதில் எது முக்கியமானது என்பதுதான் என் முடிவை தீர்மானித்தது.
உண்மையைச் சொல்லப்போனால், இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதான் சரியான விஷயம் என்று எனக்குத் தோன்றியது. அதனால் விஷயத்தை மிக எளிமையாகவே அணுகினேன். முன்பு (கேப்டன் பதவியிலிருந்து) விலகியிருந்த காலக்கட்டத்தை விட, இப்போது நான் முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.
இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.