

அனுமன் ஒரு இந்துக் கடவுளாக வணங்கப்படுகிறார். வைணவ ஆலயங்களில் இவரது உருவச்சிலையைப் பார்க்கலாம். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.
அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர், இவரே அனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு.
சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்கு "பெரிதானதது" என்பதால், "ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. இன்னொரு வழக்கில் "ஹன்" என்பதற்கு "கொன்றவன்", "மானம்" எனபதற்கு "தற்பெருமை" என்பதல், "ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பதுதான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர்.