அண்ணன் மனைவியை மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

புதுவையில் திருமண வரனை தடுத்ததால் அண்ணன் மனைவியை மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை மிரட்டல்
கொலை மிரட்டல்
Published on

புதுச்சேரி:

புதுவை சக்தி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்களுக்கு மகாலிங்கம், ராஜா என்ற 2 மகள்களும், ஒரு மகளும் உள்ளனர். மகாலிங்கம் தனியார் வங்கியில் ஊழியராகவும், ராஜா கார் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் தனது மகன்களுடன் சேர்ந்து புதிதாக வீடு கட்டினார். வீட்டில் கீழ் தளத்தில் மகாலிங்கம் தனது மனைவி இந்துமதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வீட்டின் மேல் தளத்தில் ராஜா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையே மகா லிங்கத்தின் மனைவி இந்து மதிக்கும், அவரது மாமியார் பாக்யலட்சுமிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இதனால் கணேசன் தனது மகன் மகாலிங்கத்திடம் வீட்டை காலி செய்யும்படி கூறினார். அதற்கு மகாலிங்கம் வீடு கட்ட தனது பங்கும் உள்ளதால் அதற்கு உண்டான பணத்தை கொடுத்தால் வீட்டை காலி செய்வதாக கூறினார்.

அதன்படி ரூ.8 லட்சம் தருவதாக மகாலிங்கத்திடம் அவரது தந்தை கணேசன், தம்பி ராஜா கூறினர். ஆனால், அந்த தொகையை அவர்கள் கொடுக்காததால் மகாலிங்கம் தொடர்ந்து தனது மனைவியுடன் அந்த வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். சம்பவத்தன்று பெண் வீட்டார் சம்பந்தம் பேச ராஜாவின் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது மகாலிங்கம் பெண் வீட்டாரை தடுத்து நிறுத்தி வீடு சம்பந்தமாக பிரச்சினை உள்ளதால் ராஜாவுக்கு பெண் கொடுக்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் பெண் வீட்டார் சம்பந்தம் பேசாமல் திரும்பி சென்று விட்டனர். பின்னர் மகாலிங்கம் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

பெண் வீட்டார் திரும்பி சென்று விட்டதையறிந்த ராஜா இதுபற்றி மகாலிங்கத்தின் மனைவி இந்து மதியிடம் சென்று தட்டிக் கேட்டார் இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த ராஜா தகாத வார்த்தைகளால் திட்டி இந்து மதியின் ஆடையை கிழித்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதற்கிடையே வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பிய மகாலிங்கத்திடம் அவரது மனைவி இந்துமதி நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் தனது மனைவி இந்துமதியுடன் சென்று அவரது பெற்றோரையும், தம்பி ராஜாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே உருளையன்பேட்டை போலீ சில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பு புகார் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com