

முசாபர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு, திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இவருக்கு, வேலை வாங்கி தருவதாகவும் இதற்காக தன்னை வந்து சந்திக்கும்படியும் ஆர்.கே.மெகதா என்கிற நபர் அவரிடம் கூறி உள்ளார்.
இதனை நம்பி இளம்பெண் தனது குழந்தையுடன் அந்த நபரை சந்திக்கச்சென்றார். அப்போது ஆர்.கே. மெகதா அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்தார். அதை குடித்ததும் அவர் மயங்கினார்.
பின்னர் ஆர்.கே. மெகதாவும் அவருடைய நண்பரும் மயக்கமடைந்த இளம் பெண்ணையும், அவருடைய குழந்தையும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது ஓடும் காரில் இளம்பெண்ணை அவர்கள் இருவரும் கற்பழித்தனர்.
அப்போது, இதற்கு இடையூறாக இருந்த குழந்தையை அவர்கள் காரில் இருந்து சாலையில் தூக்கி வீசினர். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தையை கிராம மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையில், முசாபர்நகரின் சாபர் பகுதியில் அந்த இளம்பெண்ணை இறங்கிவிட்டு அவர்கள் இருவரும் காரில் தப்பி சென்றனர். மயக்கம் தெளிந்த பிறகு வீடு திரும்பிய இளம் பெண் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.