தக்கலை அருகே விபத்து- மோட்டார் சைக்கிளில் வந்த இளம்பெண் பலி

தக்கலை அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இளம்பெண் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

தக்கலை:

கருங்கல் பூட்டோற்றி பகுதியைச் சேர்ந்தவர் ராபி. இவரது மனைவி அமலா (வயது 38).

கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை தோட்டிடோடு அருகே உள்ள தோட்டத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வந்தனர். மோட்டார் சைக்கிளை ராபி ஓட்டினார். அமலா பின்னால் அமர்ந்திருந்தார்.

தக்கலை அருகே திக்கணங்கோடு கொல்லாய் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராபியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்- மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அமலா அந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ராபி படுகாயம் அடைந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும், தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராபியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த அமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ராபியின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. அந்த வாகனம் எது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் இயங்கவில்லை.

இதனால் கடந்த ஒரு மாதமாக குமரி மாவட்டத்தில் விபத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. விபத்துக்களும் பெரிய அளவில் நடக்கவில்லை. இந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் தற்போது பலியாகி உள்ளார் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com