திருவண்ணாமலையில் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மேலாளர் கைது

திருவண்ணாமலையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக காப்பக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். #ChildrenHome #GirlsRescued
திருவண்ணாமலையில் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மேலாளர் கைது
Published on

திருவண்ணாமலை ரமணா நகர் எம்.கே.வி. தெருவில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. நிர்வாகியாக நந்தகுமார், மேலாளராக அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது30) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்தில் 17 வயதுக்கு உட்பட்ட 15 சிறுமிகள் உள்ளனர்.

அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடப்பதாகவும், காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்பட பல்வேறு கொடுமைகள் நடப்பதாகவும் கலெக்டர் கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

குழந்தைகள் பாதுகாப்பு நல குழும அலுவலர் கோகிலா மற்றும் போலீசார் விரைந்து சென்று காப்பகத்தில் சோதனை நடத்தினர். அப்போது காப்பகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்-டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதனை சோதனை செய்ததில் 100-க்கணக்கான ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், எதிர்த்து கேள்வி கேட்கும் சிறுமிகளை சாப்பாடு வழங்காமல் பட்டினி போட்டு கொடுமை செய்ததாகவும் கதறி அழுதபடி கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து காப்பகத்தில் இருந்து கம்ப்யூட்டர், லேப்-டாப் உட்பட முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், காப்பகத்துக்கு பூட்டு போட்டனர். திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள காப்பகத்தின் நிர்வாகி நந்தகுமாரை தேடி வருகின்றனர். இரவு காவலர், சமையலர் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 15 சிறுமிகளும் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோல், திருவண்ணாமலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். #ChildrenHome #TiruvannamalaiCollector #GirlsRescued

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com