

பாகூர்:
தவளக்குப்பத்தை அடுத்த தானாம்பாளையத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 65) விவசாயி.
இவர் இன்று அதிகாலை சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் புதுவை வந்தார். பின்னர் புதுவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது இடையார்பாளையம் அருகே வந்த போது நோணாங்குப்பத்தை சேர்ந்த அருள் (29) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணபதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
கணபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருள் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கணபதியை மட்டும் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதே போல் பாகூரை அடுத்த சேலியமேடு பகுதியை சேர்ந்த ரகுராமன் மனைவி சுதா (40). இவர் சொந்த வேலை காரணமாக கடலூர் சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் சுதா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மேலும் எதிரே வந்த கன்னியகோவில் பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து கிருமாம் பாக்கம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்து ஏற்படுத்தியவர் கடலூரை சேர்ந்த சிலம்பரசன் என்பது தெரிய வந்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.