

ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிலோஃபெர் மருத்துவமனையில் முதல் தாய்ப்பால் வங்கி கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து சிசுக்கள் மரணத்தை குறைப்பதற்காக மேற்கொண்டு சில அரசு மருத்துவமனைகளிலும் தாய்ப்பால் வங்கி திட்டத்தை விரிவுபடுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மாநில மருத்துவ கல்வி இயக்குனர் ரமேஷ் ரெட்டி தெரிவித்தார்.
தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்து அவை 200 மில்லி லிட்டர் அளவுள்ள புட்டிகளில் அடைக்கப்பட்டு பதப்படுத்தும் கருவியில் பொருத்தப்படும். ஒரு முறைக்கு 2.4 லிட்டர் பாலை பதப்படுத்த முடியும். பாலில் கிருமித் தொற்று இருந்தால் அதை நீக்கும் வகையில் 62.5 டிகிரியில் 30 நிமிடங்கள் தாய்ப்பால் பதப்படுத்தப்படும். பின் தாய்ப்பால் சேமித்து வைக்கப்படும் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலை சேமித்து வைக்க முடியும்.
குறை மாதத்தில் அல்லது எடைக்குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதாரண பிரசவத்தில் குழந்தை பெற்ற தாயின் பாலை வழங்க முடியாது. எனவே அத்தகைய தாய்மார்களின் பாலையும் சாதாரணமாக பிரசவம் நடைபெற்ற தாய்மார்களின் பாலையும் தனித்தனியே சேமிக்க வசதி உள்ளது.
தாயும் குழந்தையும் வெவ்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தால் தாயிடம் இருந்து பாலைச் சேகரித்து தேவைப்படும் போது குழந்தைகளுக்கு வழங்க முடியும். தாய்மார்களிடம் உபரியாக இருக்கும் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு தேவையுள்ள வேறு குழந்தைகளுக்கு வழங்க முடியும்.
அவ்வாறு சேமிக்கப்பட்ட தாய்ப்பாலானது தாய்ப்பால் சுரக்காத அல்லது குறைவாகச் சுரக்கும் தாய்மார்களின் குழந்தைகள், எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் பி.சி. பாதிப்புள்ள தாய்மார்களின் குழந்தைகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தைகள் மரணத்தை குறைக்க முடியும்.
தமிழக அரசு குழந்தைகள் நல மருத்துவமனைகளில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.