

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இதேபோல் ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் சந்தோஷ்குமார் (23). இவர் சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர் அவ்வப்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சமயத்தில் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அம்மாணவி, சந்தோஷ்குமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ்குமார், அவரது தாய் கற்பகம், தந்தை சண்முகம், சகோதரர்கள் சந்தோஷ்பாண்டியன், ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து அந்த மாணவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி அவர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின்பேரில் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீதும் கொலை மிரட்டல், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.