

புதுடெல்லி:
கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 1 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்து 999 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் 7 மாதங்களில் இந்தியாவில் 33 ஆயிரம் டன் கொரோனா மருத்துவ கழிவுகள் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதில் அக்டோபர் மாதத்தில் தான் அதிகபட்சமாக 5,500 டன் மருத்துவ கழிவுகள் ஏற்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த 7 மாதங்களில் 5,367 டன் மருத்துவ கழிவுகள் ஏற்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக் கேரளாவில் 3,300 டன்னும், குஜராத்தில் 3,086 டன்னும், தமிழ்நாட்டில் 2,806 டன்னும், உத்தரபிரதேசத்தில் 2,502 டன்னும், டெல்லியில் 2,421 டன்னும், மேற்குவங்காளத்தில் 2,095 டன்னும், கர்நாடகத்தில் 2,026 டன்னும் கொரோனா மருத்துவ கழிவுகள் ஏற்பட்டுள்ளன.
டிசம்பர் மாதத்தில் 4,530 கொரோனா மருத்துவக் கழிவுகள் உருவாக்கம் செய்யப்பட்டன.