

புதுடெல்லி:
மத்திய பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலை ஊழியர்களை நியமிப்பதற்கான தேர்வு மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்(எஸ்.எஸ்.சி.) சார்பில் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி முடிய நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளின்போது வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட ஒரு தனியார் நிறுவனம் வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டதாக தெரிகிறது.
இதை கண்டித்தும், இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மாணவ அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் எதிரே மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகாரில் நேற்று மாணவர்கள் அமைப்புகளின் சார்பில் ரெயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை, டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி, மாணவ பிரதிநிதிகளோடு சென்று நேரில் சந்தித்து முறையிட்டார். அதைக்கேட்ட ராஜ்நாத் சிங், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவ பிரதிநிதிகளிடம் உறுதி அளித்தார்.
இதேபோல் அவர்கள் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் அஷிம் குரானாவையும் சந்தித்து முறையிட்டனர்.
இந்த நிலையில், வினாத்தாள் வெளியானது மற்றும் அவை தொடர்பான விவகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சிபாரிசு செய்ய மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஒப்புக்கொண்டு உள்ளது.
இதுபற்றி அந்த ஆணையத்தின் தலைவர் அஷிம் குரானா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவின் வாயிலாக மத்திய அரசிடம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது” என்று கூறப்பட்டு உள்ளது.