

பா.ஜ.க. ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மார்ச் 13-ம் தேதி இரவு விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டுடன் பா.ஜ.க. ஆட்சி முடிவடைய உள்ளது.
இதையடுத்து, 2019-ல் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றுதிரட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் மார்ச் 13-ல் டெல்லியில் நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரசார் கூறுகையில், மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றவும் இந்த விருந்து பெரிதும் உதவும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.