சோழவரம் அருகே நிலத்தடி நீரை திருடி விற்ற 3 நிறுவனங்களுக்கு சீல்

சோழவரம் அருகே நிலத்தடி நீரை திருடி விற்ற 3 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
குடிநீர்
குடிநீர்
Published on

செங்குன்றம்:

சோழவரம் ஒன்றியத்தில் பூதூர் ஊராட்சி கொக்குமேடு கிராமம் உள்ளது.

அரசு அனுமதி இல்லாமல் மூன்று இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் திருடப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. பூதூர் மற்றும் கொக்குமேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த மாதம் பொதுமக்கள் அருமந்தை கூட்டுச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பொன்னேரி வருவாய் துறையினர் மற்றும் சோழவரம் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் கொக்குமேடு பகுதியில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுக்க பயன்படுத்தப்படும் 3 மின்மோட்டார்களை பெண்கள் அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில் கொக்குமேடு கிராமத்தில் மூன்று இடங்களில் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்தினர் நிலத்தடி நீர் எடுப்பதை பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து சோதனையிட்டனர். அனுமதியின்றி தண்ணீர் திருடி விற்ற மூன்று நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். அந்த உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர் நிலத்தடி நீர் திருடி விற்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சோழவரம் போலீசாருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com