

செவ்வாப்பேட்டை:
செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் திருவள்ளூர் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டது.
மின்சார ரெயில் சென்ற சிறிது நேரத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் அந்த மின்சார ரெயில் நடுவழியில் நின்றது.
இதுகுறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற அனைத்து மின்சார ரெயில்களும் வரும் வழியில் நிறுத்தப்பட்டது.
திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அறுந்து விழுந்த மின்சார வயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற விரைவு ரெயில் செவ்வாப்பேட்டை அருகே நடுவழியில் நின்ற மின்சார ரெயில் அருகே நிறுத்தப்பட்டது.
மின்சார ரெயிலில் இருந்த பயணிகள் திருப்பதி ரெயிலில் ஏரி பயணம் செய்தனர். அதில் ஏற முடியாமல் பெண்களும், வயதானவர்களும் சிரமப்பட்டனர்.
சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் சிறிது நேரத்துக்கு பின்னர் பட்டாபிராமில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்டது.
இதனால் நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.
புட்லூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் இறங்கி அங்கிருந்து வாகனங்களில் சென்றனர். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 3 மணிநேரத்துக்கு பின்னர் மின்வயர் சரிசெய்யப்பட்டது. பின்னர் வழக்கம் போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. திருவள்ளூரில் இருந்து சென்னை மார்க்கத்தில் சென்ற மின்சார ரெயில் பாதையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.