சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- உறவினர் உள்பட 2 பேர் கைது

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சேலம்:

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை பெற்றோர் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு கோவிலுக்கு சென்றனர். அப்போது அந்த சிறுமியை அவருடைய உறவினரான அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளியான கண்ணன் (வயது 35) என்பவர் கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான கேசவன் (28) என்பவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியுடன் கேசவனுக்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும் அந்த சிறுமிக்கு அவர் செல்போன் ஒன்று வாங்கி கொடுத்தார். மேலும் அந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமியிடம், செல்போன் வாங்கி கொடுத்தது யார்? என்று பெற்றோர் கேட்டுள்ளனர். இதையடுத்து தான் அந்த சிறுமி தனது பெற்றோரிடம், கண்ணன் மற்றும் கேசவன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணன், கேசவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு வந்த பின்னர் அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com