பழனி கோவிலில் உண்டியல்கள் மூலம் 12 நாளில் ரூ.2.48 கோடி வருமானம்

பழனி முருகன் கோவிலில், 12 நாட்களில் உண்டியல்கள் மூலம் ரூ.2 கோடியே 48 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
பழனி கோவிலில் உண்டியல்கள் மூலம் 12 நாளில் ரூ.2.48 கோடி வருமானம்
Published on

பழனி:

பழனி முருகன் கோவிலில், கடந்த 11-ந் தேதி உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. அதன் பின்னர் 12 நாட்களுக்கு பிறகு மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.

கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, முதுநிலை கணக்கு அதிகாரி மாணிக்கவேல், அறநிலையத்துறை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.

இதில் ரூ.2 கோடியே 48 லட்சத்து 6 ஆயிரத்து 163-ஐ பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்திஇருந்தனர். மேலும் தங்கம் 13,025 கிராம், வெள்ளி 20,050 கிராம், 687 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் ஆகியவையும் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டிருந்தது.

இது தவிர தங்கத்தால் ஆன வேல், சங்கிலி, மோதிரங்கள், வெள்ளி வேல், வெள்ளிப்பாதம், வெள்ளி வீடு, வெள்ளி காவடி, கிரீடம் மற்றும் வெள்ளி பொருட்களும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கடிகாரம், பட்டு வேட்டி போன்ற பல்வேறு பொருட்களும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

உண்டியல் எண்ணும் பணியில் பழனியில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், பழனி மகளிர் கலை கல்லூரி மாணவிகள், சமுதாய பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள், நாதசுர, தவில் கல்லூரி மாணவர்கள், கோவில் அலுவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com