

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராடி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் பலியான நிலையில், உயிரை காக்க லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.
வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா இன மக்கள் அங்கு அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் உள்ள சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தனியார் செய்தி நிறுவனம் தனது குழுவை வங்காளதேசத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அகதிகள் முகாம்களில் இருக்கும் பெரும்பாலான சிறுமிகள் பெற்றோரை இழந்து வாடுகின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட பல கடத்தல்காரர்கள் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்துகின்றனர். மேலும், வேலை வாங்கி தருவதாக கூறி பல நகரங்களுக்கு சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதற்கான பல ஏஜென்டுகள் முகாம்களில் உள்ளனர். அவர்கள் வெளிப்படையாகவே இந்த தொழிலை செய்து வருகின்றனர். சில சிறுமிகள் பாலியல் தொழில் என தெரிந்தும் தனது குடும்பத்திற்காக இதனை செய்கின்றனர். நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக வாழ்வதால் கிடைக்கின்ற வேலையை செய்து வருவதாக சிறுமிகள் கூறினர்.