

புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் ஆகஸ்டு 8-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து பாராளுமன்ற மாநிலங்களவைக்கான புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் அகமது பட்டேல் போட்டியிடுகிறார்.
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தனர். இதைதொடர்ந்து, மீதமுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்கும் வகையில், அவர்களை பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் எரிசக்தி துறை மந்திரியாக இருப்பவர் சிவகுமார். இவரது வீடு பெங்களுரில் அமைந்துள்ளது. இவருக்கு சொந்தமான ஈகிள்டன் கோல்ப் விடுதியில் தான் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மந்திரி சிவகுமாருக்கு சொந்தமான கனகபுரா மற்றும் சதாசிவநகர் பகுதிகளில் உள்ள வீடுகள் உள்பட 39 இடங்களில் சோதனை நடத்தினர். ஏற்கனவே, வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும், குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு சொந்தமான சொகுசு விடுதியிலும் திடீரென புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர்.
இதேபோல், டெல்லியில் உள்ள கர்நாடக மந்திரி சிவகுமாரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் ஏழரை கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மந்திரியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலை சீர்குலைக்க மத்திய அரசு செய்த சதிவேலை என்று அகமது பட்டேல் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமைய்யா இது பா.ஜ.க. அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று காலை பாராளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. இதனால், காலையில் இருந்து மூன்று முறை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் உணவு இடைவேளைக்கு பிறகும் இந்தப் பிரச்சனையை மையமாக வைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது.