மத்திய பணியாளர் தேர்வில் முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு - ராஜ்நாத் சிங் தகவல்

மத்திய பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ-க்கு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த தகவலை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
மத்திய பணியாளர் தேர்வில் முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு - ராஜ்நாத் சிங் தகவல்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலை ஊழியர்களை நியமிப்பதற்கான மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தேர்வு (எஸ்.எஸ்.சி.) கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடந்தது.

தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஒரு தனியார் நிறுவனம் வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது குறித்து, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வட மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இது தொடர்பாக அவர்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தலைவர் அஷிம் குரானா ஆகியோரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

இந்த நிலையில், மத்திய பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ-க்கு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த தகவலை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே மாணவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிடவேண்டும்” என்றார்

இதற்கிடையே, மத்திய பணியாளர் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு விசாரணை குழுவின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட கோரி, மனோகர் லால் சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மனு மீது வருகிற 12-ந்தேதி விசாரணை நடக்கும் என கூறி உத்தரவிட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com