

சென்னை:
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வயல்வெளியில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களுடன் மாணவ- மாணவிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தினமும் வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக மெரீனா கடற்கரையிலும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்த வர உள்ளதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் போராட்டத்தை முன் கூட்டியே தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் மெரீனா கடற்கரையில் இன்று குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ் நிறுத்தங்களில் மொத்தமாக யாராவது வந்து இறங்கினால் அவர்களிடம் போலீசார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரிக்கின்றனர். மெரீனாவில் வழக்கத்துக்கு அதிகமாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகிறது.