

புதுடெல்லி:
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது 2017 நோக்கியா 3310 பதிப்பினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ரூ.3310 என்ற விலையில் புதிய நோக்கியா 3310, மே 18-ந்தேதி முதல் நாட்டின் முன்னணி மொபைல் வர்த்தகர்களிடம் விற்பனைக்கு வருகிறது. நான்கு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3310 உடன் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதம் எச்எம்டி குளோபல் அறிமுகம் செய்தது.
புத்தம் புதிய நோக்கியா 3310 பீச்சர் போனில் சீரிஸ் 30+ இயங்குதளம் மற்றும் 2.4 இன்ச் QVGA, 240x320 பிக்சல் டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 2 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 3310 (2017) பீச்சர் போனில் 1200 எம்ஏஎச் திறன் கொண்ட பேடட்டரியும், இரண்டு மைக்ரோ சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியாவின் பிரபல 'ஸ்நேக்' கேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேம் முந்தைய பதிப்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்து நாள் முழுக்க பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய நோக்கியா 3310 போனில் கேமரா, எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகளுடன் நவீன வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான பேட்டரி பேக்கப் கொண்டுள்ளதால், எந்நேரத்திலும் நோக்கியா 3310 உங்களை கைவிடாது என எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் இந்திய துணை தலைவர் அஜய் மேத்தா தெரிவித்துள்ளார்.