காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்ம மரணம் - கணவரிடம் போலீசார் விசாரணை

ஒரத்தநாட்டில் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்ததையடுத்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவியின் கணவர்
கல்லூரி மாணவியின் கணவர்
Published on

ஒரத்தநாடு:

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் இந்துமதி (வயது 21). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இந்துமதிக்கும் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமார் (28) என்ற வாலிபருக்கும் ‘‘பேஸ்புக்’’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது.

காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரத்தநாட்டில் தனியாக வீடு வாடகை எடுத்து அவர்கள் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே இந்துமதி, வழக்கம் போல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சென்று படித்து வந்தார். சதீஷ்குமார், எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் சதீஷ் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக அவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் இந்துமதி கண்டித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே இந்துமதி நேற்று இரவு வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் ஒரத்தநாடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து இந்துமதி உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்து தூக்கில் விடப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்துமதியின் சாவு குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களும் ஒரத்தநாட்டுக்கு வர உள்ளனர்.

பேஸ்புக் மூலம் பழகி காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியின் மர்ம சாவு, ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com