கேரளாவில் கணவர் கண் முன்பு குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

கேரளாவில் குடும்ப தகராறு காரணமாக கணவர் கண் முன்பு குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த மாயா.
10 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த மாயா.
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சாத்தனூர் பாரக்கல் அருகே உள்ளது காடியாதி. இந்த பகுதியை சேர்ந்த மணி- அம்புலி மகள் மாயா (வயது 19). இவரும் அதே பகுதியை சேர்ந்த திலீப் (24) என்பவரும் திருமணம் ஆகாமலேயே கணவன்- மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு பிறந்து 10 மாதங்களே ஆன மைதிலி என்ற பெண் குழந்தை இருந்தார்.

திலீப் நடன பயிற்சியாளராக உள்ளார். நடனம் பயிற்சி அளிக்க செல்லக்கூடாது என்று மனைவி தடைபோட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த திலீப் அங்குள்ள பயிற்சி மையத்தில் பெண்களுக்கு நடன பயிற்சி அளித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று திலீப் நடனபள்ளிக்கு புறப்பட தயாரானார். இதற்கு மாயா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இனிமேல் நடன பயிற்சிக்கு சென்றால் தான் குழந்தையுடன் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார். இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் திலீப் புறப்பட்டார்.

இதில் ஆத்திரமடைந்த மாயா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றார். திலீப் இதனை பார்த்து அவர்களை தடுக்காமல் அலட்சியம் செய்ததாக தெரிகிறது. கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையுடன் மாயா 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப் சத்தம்போட்டு கிணறு அருகே ஓடினார். அங்கு தாயும், மகளும் தண்ணீரில் தத்தளித்தனர். அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். கிணற்றில் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் தண்ணீர் அதிகம் இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை.

இது குறித்த பரவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தாய்- மகளை மீட்டு பாரிப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பாரிப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com