கணவர் வீட்டில் இந்தோனேஷிய பெண் தற்கொலை செய்தது ஏன்?

குலசேகரத்தில் கணவர் வீட்டில் இந்தோனேஷிய பெண் தற்கொலை செய்தது ஏன்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெர்தாமியாவர்தானியா
பெர்தாமியாவர்தானியா
Published on

குலசேகரம்:

குலசேகரத்தை அடுத்த பொன்மனை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 32).

டிப்ளமோ பட்டதாரியான சுபாஷ், இந்தோனேஷியாவில் வேலை பார்த்து வருகிறார். வேலை நிமித்தம் அங்குள்ள லாம்புங் என்ற இடத்தில் உள்ள இன்னொரு ஆலைக்கு சென்ற போது அங்கு சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்த பெர்தாமியா வர்தானியா (28) என்ற பெண்ணை சந்தித்தார்.

சுபாசும், இந்தோனேஷிய பெண்ணான பெர்தாமியா வர்தானியாவும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இது காதலாக மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு சுபாசின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சுபாஷ், பெர்தாமியா வர்தானியாவை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததால், சுபாசின் பெற்றோர் இதற்கு ஒப்புக்கொண்டனர்.

இது பற்றி பெர்தாமியா வர்தானியாவும் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு இரு வீட்டு பெரியவர்களும் சந்தித்து சுபாஷ்- பெர்தாமியா வர்தானியா திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தினர்.

அதன்பின்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெர்தாமியா வர்தானியாவின் தந்தையும், சகோதரியும் இந்தியா வந்தனர். இங்கு சுபாசின் சொந்த ஊரான குலசேகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடந்தது. தொடர்ந்து அவர்கள் இத்திருமணத்தை திருவட்டாரில் உள்ள திருமண பதிவு அலுவலத்திலும் பதிவு செய்து கொண்டனர்.

இங்குள்ள சம்பிரதாயங்கள் முடிந்த பின்பு சுபாஷ்- பெர்தாமியா வர்தானியா ஜோடி இந்தோனேசியா சென்று தங்களின் இல்லற வாழ்க்கையை தொடங்கினர்.

அங்கு 8 மாதங்கள் குடும்பம் நடத்தி வந்த நிலையில் திடீரென சுபாஷ் மனைவியிடம் சொல்லாமல் இந்தியா திரும்பிவிட்டார்.

இதை அறிந்து துடித்துபோன பெர்தாமியா வர்தானியா, இந்தோனேஷியாவில் சுபாஷ் வேலை பார்த்த நிறுவனத்திற்கு சென்று விசாரித்தார். அவர் இந்தியா சென்றதை தெரிந்து கொண்டதும், அவரும் அங்கிருந்து கடந்த மாதம் 27-ந் தேதி சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார்.

குலசேகரம் கணவர் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு சுபாசிடம், சொல்லாமல் கொள்ளாமல் இந்தியா வந்தது ஏன்? என்று கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

சுபாஷ் சபரிமலைக்கு மாலை அணிந்திருப்பதாக கூறியதால் இருவரும் வீட்டில் தனித்தனியாகவே தங்கினர். இது பெர்தாமியா வர்தானியாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. கடந்தவாரம் சுபாஷ், சபரிமலைக்கு புறப்பட்டு சென்றார். அதன்பின்பு நேற்று முன்தினம் தான் அவர் ஊர் திரும்பினார்.

ஊருக்கு வந்தபின்பும் வீட்டுக்கு செல்லாமல் சுபாஷ் இறச்சக்குளத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இது பெர்தாமியா வர்தானியாவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் சுபாசிடம் மீண்டும் விவாதம் செய்தார். உன்னோடு சேர்ந்து வாழ விரும்புகிறேன். ஆனால் நீ விலகி செல்வது ஏன்? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதனால் சுபாஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

அப்போது படுக்கை அறைக்குள் சென்ற பெர்தாமியா வர்தானியா திடீரென உத்திரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பெர்தாமியா வர்தானியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் பெர்தாமியா வர்தானியாவின் உடலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெர்தாமியா வர்தானியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி பொன்மனை கிராம நிர்வாக அதிகாரி ரவி, குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குலசேகரம் போலீசார் பெர்தாமியா வர்தானியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தற்கொலை செய்த பெர்தாமியா வர்தானியா இந்தோனேஷிய பெண் என்பதால் அவரது சாவு குறித்த தகவல்களை போலீசார் வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் சாவுக்கான காரணத்தையும் விவரிக்க வேண்டும்.

எனவே இப்பிரச்சினை குறித்து குளச்சல் ஏ.எஸ்.பி. அபினவ் இன்று விசாரணை நடத்தினார். இதற்காக பெர்தாமியா வர்தானியாவின் கணவர் சுபாஷ் மற்றும் அவரது பெற்றோர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜராகி சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர்.

இன்று பெர்தாமியா வர்தானியாவின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. அதன் அறிக்கை கிடைத்த பின்பே அவரது சாவில் மர்மங்கள் இருக்கிறதா? என்பது தெரியவரும். இதனால் பெர்தாமியா வர்தானியாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே பெர்தாமியா வர்தானியாவின் பெற்றோருக்கும் அவர் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்தியா வந்தால் இது தொடர்பான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com