

கோவை:
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு முதல் முறையாக கமல் கோவை வருவதால் அவரது வருகையை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் கமல்ஹாசன் கோவை வந்த போது, நான் நேரடி அரசியலுக்கு எப்போதோ வந்து விட்டேன், கோட்டையை நோக்கிய அரசியல் பயணம் தொடங்கி விட்டது என பேசினார்.
கமலின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலின் பேச்சுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்திருந்தனர். ஆனால் கமல் தனது அரசியல் பயணத்தை கோவையில் இருந்தே தொடங்கி விட்டதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில் வருகிற 10-ந் தேதி கமல் கோவை வரும் நிலையில் அவரை வைத்து கட்சி கொடியேற்று விழா நடத்த ரசிகர் மன்றத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்டி வரும் ரசிகர் மன்றத்தினர் கமல் வருகையின் போது கோவை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக முறைப்படி போலீசாரிடம் அனுமதி வாங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
கோவை வரும் கமல்ஹாசன் கொடியேற்று விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கார் மூலம் ஈரோடு செல்கிறார். அங்கு 10, 11-ந் தேதி ஆகிய 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். #tamilnews