

பெங்களூரு:
கர்நாடக மின்சாரத்துறை மந்திரி சிவகுமார் வீட்டில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இன்று 4-வது நாளாகவும் சோதனை நீடித்து வருகிறது.
அவரது தம்பியும், எம்.பி.யுமான சுரேஷ் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், மந்திரியுடன் இணைந்து தொழில் நிறுவனங்களில் பங்குதாரர்களாக உள்ளவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. மந்திரியின் ஜோதிடர் துவாரகநாத் வீட்டிலும் சோதனை நடந்தது.
இன்று காலை பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள மந்திரி சிவகுமார் வீட்டுக்கு 2 ஆடிட்டர்கள் வரவழைக்கப்பட்டனர். இதில் ஒருவர் மந்திரி சிவகுமாரின் ஆடிட்டர் ஆவார். இன்னொருவர் ஜோதிடர் துவாரகநாத்தின் ஆடிட்டர் ஆவார்.
இந்த 2 ஆடிட்டர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று 4-வது நாளாக பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள மந்திரி சிவகுமார் வீட்டு முன்பு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடியிருந்தனர்.
அவர்களை பார்த்து கும்பிட்ட மந்திரி சிவகுமார் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார். வருமானவரி அதிகாரிகள் சோதனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி தொண்டர்களை அமைதிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மந்திரி சிவகுமாரின் மாமனார் திம்மையா வீடு மைசூரு அருகே இட்டிகேகூடு பகுதியில் உள்ளது. அங்கு கடந்த 3 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திம்மையா மைசூரு தொழிற்பேட்டையில் ஏற்கனவே மஞ்சள், குங்குமம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். தற்போது சியக்காய் தூள் தொழிற்சாலையும் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலைகளில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சில ஆவணங்களை காட்டி திம்மையாவிடம் விசாரணை நடத்தினர்.
வருமானவரித் துறையை தொடர்ந்து அமலாக்கத்துறையும் மந்திரி சிவகுமாரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாயின.
இதற்காக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்கள் வருமான வரித்துறையில் இருந்து அமலாக்கத்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.