

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்துள்ளன.
இந்த வழக்கு மனுவில், ‘சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 22-ந்தேதி தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
இன்று முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்காத வாகன ஓட்டிகளுக்கு, ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை, அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது’ என்று கூறப்பட்டிருந்தது.
அந்த மனுவில், ‘லாரி உரிமையாளர்கள், டிரைவர்களை பணியில் அமர்த்தும் போது, அவர்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள். விபத்து உள்ளிட்ட பிரச்சனை வரும்போது, கோர்ட்டிலோ அல்லது போலீசாரிடமோ அந்த அசல் ஓட்டுனர் உரிமத்தை வழங்குவார்கள். ஆனால், இப்போது ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், லாரி உரிமையாளர்களுக்கு பாதிப்பு வரும்.
லாரிகள் திருட்டு, கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளும் வரும். ஓட்டுனர்களின் ஆவணங்கள் எதுவும் உரிமையாளர்களிடம் இருக்காது. எனவே, அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி துரைசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கோவிந்த ராமன் ஆஜராகி, ‘மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. நகல் வைத்திருந்தாலே போதுமானது என்று கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, மத்திய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிராக, தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ‘ஏற்கனவே இது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதே? அது என்னவானது?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு சிறப்பு பிளீடர் திவாகர், ‘அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், தலைமை நீதிபதி விடுப்பு எடுத்துள்ளதால், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், தண்டபாணி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது’ என்றார்.