

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசார் தங்களை கண்டுபிடிக்க இயலாத வகையில் குற்றவாளிகள் மிக சாதுர்யமாக செயல்படுகின்றனர்.
ஆனால், அபுதாபி காவல்துறையினர், தடயம் இல்லாத வழக்குகளையும் அலசி ஆராய்ந்து நிஜ குற்றவாளிகளை பிடித்துவிடுகின்றனர். எப்படி என்கிறீர்களா...? அவர்கள் பூச்சிகளையும் ரகசிய உளவாளிகளாக மாற்றி, அதன்மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர். இது குறித்து அபுதாபி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘‘குற்றச் சம்பவம் எப்போது நடந்தது?, எங்கு நடந்தது?, கொலையானவர் இறந்து எத்தனை மணிநேரம் இருக்கும்? என்பதை அடிப்படையாக வைத்தே, கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, மறு இடத்தில் உடல் வீசப்பட்டால் மேல் குறிப்பிட்டவற்றை சரியாக யூகிக்க முடியாது.
உடற்கூறு ஆய்வுகள் குற்ற புலனாய்வு விசாரணையில் கை கொடுத்தாலும், குற்றவாளிகளை நெருங்குவதில் தாமதம் ஏற்படலாம். இல்லையேல் காவல்துறையின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. அதனால்தான் தற்போது பூச்சி உளவாளிகளை பயன்படுத்துகிறோம்.
ஈக்களும், பூச்சிகளும் இறந்த உடல்களில் அமரக்கூடியவை. அதேசமயம் உடலை வீசிச்செல்ல வரும் கொலையாளிகளின் மீதும் உட்காரும். சில கொசுக்கள், கொலையாளிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
சில ஈக்களும், பூச்சிகளும் மனிதர்களின் உடல் திரவங்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதனால் கொலையாளிகளின் தகவலும், கொலை செய்யப்பட்டவரின் தகவலும் பூச்சிகளின் வயிற்றில் சேமிக்கப்படுகின்றன.
அதனால் குற்றச்சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து பரிசோதித்தால், எத்தனை நபர்கள் வந்தனர், யார் யார் வந்தனர், எப்போது வந்தனர் போன்ற தகவல்களை கண்டுபிடித்துவிட முடியும்.
இப்படி தடயங்களை சேமித்துக்கொடுக்கும் பூச்சிகள், உடற்கூறு ஆய்வு முடிவுகளையும் துல்லியமாக விளக்கிவிடுகின்றன. ஏனெனில் ‘புளோ பிளை’ எனப்படும் ஈக்கள்தான் இறந்த சடலத்தில் முதலில் அமரும் பூச்சியினம். இவை இறந்த சடலத்தின் மீது அமர்வதோடு, அங்கேயே முட்டைகளையும் ஈடுகின்றன.
முட்டைகள் லார்வா எனப்படும் புழுக்களாக மாறி, அந்த சடலத்திலேயே வளர்வதால் இந்த பூச்சிகளை கொண்டு விவரமான உடற்கூறு ஆய்வுகளை எழுதிவிட முடியும். உடற்கூறு ஆய்வில் கிடைக்கும் அத்தனை விவரங்களையும், இறந்த உடலில் வளர்ந்த பூச்சிகளின் மூலம் பெறமுடியும்’’ என்கிறார், அபுதாபி காவல்துறையின் உயர் அதிகாரி.
இதுவரை பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள் அபுதாபி காவல்துறையினர். இங்கு கொள்ளை, கொலை நடந்த இடங்களுக்கு மோப்ப நாய் வரவழைக்கப்படுவதை போன்றே அமீரகத்தில் பூச்சிகளை சேகரிக்கும் குழுவையும் வரவழைக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து ஆராய்ச்சி நடத்தி, தடயங்களை சேகரிக்கிறார்கள்.