மதுரை அருகே 7 மாத பெண் குழந்தை கொலை? - தந்தையிடம் விசாரணை

மதுரை அருகே 7 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் குழந்தையின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே 7 மாத பெண் குழந்தை கொலை? - தந்தையிடம் விசாரணை
Published on

மதுரை:

மதுரை அருகே உள்ள கருவனூரை சேர்ந்தவர் ஆறுமுகம், கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 20). இவர்களுக்கு மகாலட்சுமி என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது.

நேற்று காலை குழந்தை மகாலட்சுமியை தாய் புவனேஸ்வரி தொட்டிலில் இருந்து எடுத்து பால் ஊட்டி விட்டு தூங்க வைத்தார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த குழந்தை மூச்சுத்திணறி இறந்து கிடந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 7 மாத குழந்தை மரணத்தில் தனது கணவர் ஆறுமுகம் மீது சந்தேகம் இருப்பதாக புவனேஸ்வரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. சத்திரப்பட்டி போலீசார் குழந்தை மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த குழந்தை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தை என்பதால் கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் ஆறுமுகத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com